வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சுதந்திர தின வாழ்த்துக்கள்

       சுதந்திர      
தின 
வாழ்த்துக்கள் 
 இனிய இந்தியா,                                                                                                                          
                                               ஒன்றல்ல இரண்டல்ல இருநூறு ஆண்டுகளுக்கு மேல்   கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு இதே போன்ற ஆகஸ்டு 15 வெள்ளிக் கிழமை அன்று இரவில் இஷ்டமான சுதந்தரத்தைப் பெற்றெடுத்தாய்.              
               நீ பெற்றெடுத்த பிள்ளையோ தறுதலைப் படுத்தப் பட்டது, தகப்பனாகிய காந்தியத்துவம் இல்லாத காரணத்தால். உன் பிள்ளையின் பெயரால் மதிக்கப்பட வேண்டியவர்(வை)கள் மிதிக்கப்படுகிறார்கள்.
          பசுமை மிகு இந்தியா பஞ்சம் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.  காடுகள் அடுக்ககங்களாக மாறி வருகின்றன.  காட்டின் விலங்குகள் நாட்டின் மக்களை பதம் பார்க்க பல இடங்களில் பயமுறுத்துகிறது.    
                     உன்  குழந்தையைக் காக்க மீண்டும் வேண்டும் நல்ல பல மனித அவதாரங்கள். ஐந்து விரல்கள் வேறானாலும்   கை  ஒன்றாகும். மதங்கள் பலவானாலும் மொழிகள் வேறானாலும், கலாசாரங்கள் பல விதமானாலும் கூட்டுக் குடித்தனத்தில் வேறுபாடுகள் பல மறந்திருந்தாய். பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பினாய் அப்போது. ஆனால் இப்போதோ வேறுபாடுகளை மனதில் கொண்டு குடிக்கும் நீரையும் கூட பகிர மனமற்றிருக்கிறது உன் பிள்ளை. ஒரு  கண் சுண்ணாம்பையும் மறு கண் வெண்ணையையும் பூசிக் கொண்டிருக்கிறது. நட்புப் பாலங்கள் பலப்பட வேண்டிய நிலையில் உன் பிள்ளையின் குடித்தனக்காரர்களின்  ஆற்றுப் பாலங்கள்  விரிசல் கொண்டுள்ளன. பொதுவுடைமை  ஆக வேண்டிய ஆற்று நீரோ தனியுடைமை பெற்றுள்ளது
பணக்கார வேடத்தில் பிச்சையும் பிச்சைக்கார வேடத்தில் சம்பதிப்பதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.  இவையெல்லாம் நன்னெறியில் கத்தியின்றி ரத்தமின்றி கடந்து நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையுமாக உன் 68 வயது பிள்ளை மாபெரும் சபைகளில் மென்மேலும் மாலைகள் விழ வெற்றி நடை போட்டு வாழ்வாங்கு  வாழ சுதந்திர இந்தியாவிற்கு 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு           
padmaarunac .blogspot .in