ஞாயிறு, 1 ஜூன், 2014

படித்ததில் பிடித்தது

ஆசிரியப் பணியில் உள்ள என் போன்றோருக்கு மேற்கோள் கூறிப் பேசவும் வழி நடத்தவும் வாழ்ந்து காட்டவும் ஒளவைப் பாட்டி அன்று கூறியதை இன்று கணினி வழி அழகாக எடுத்து உரைத்த   அவர்களுக்கு நன்றி. அவருடைய தினம் ஒரு பா ப்ளாகில் அவர் விவரித்தவை அப்படியே காப்பி செய்யப்பட்டுள்ளது. கீழ்வருவற்றுள் தன்மை பொருளில் வருவனவற்றிற்கு திரு .சொக்கன் அவர்களையே பொருள் கொள்க.

மனிதரில் மூன்று வகைகள்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல
குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்
பலா, மாவைப் பாதிரியைப் பார்
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: ஔவையார்
அசைகின்ற அழகிய மாலையைச் சூடியவளே, வேல் போன்ற கண்களை உடையவளே,
மனிதர்களில் மூன்று வகை.
சிலர், நல்ல விஷயங்களைச் சொல்லாமலே செய்வார்கள்.
வேறு சிலர், சொல்லிவிட்டுச் செய்வார்கள்.
இன்னும் சிலர், சொல்வார்கள், ஆனால் செய்யமாட்டார்கள்.
இவர்களைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் பலா, மா, பாதிரியைப் பார்.
பலா மரம், பூக்காது, ஆனால் காய்க்கும், இனிமையான சுளைகளைக் கொண்ட பழங்களைத் தரும். சொல்லாமலே செய்கிற முதல் வகை மனிதர்களுக்கு உவமை இது.
மா மரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும், எதையும் சொல்லிவிட்டுச் செய்கிற இரண்டாவது வகை மனிதர்களுக்கு உவமை இது.
பாதிரி மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, பழுக்காது, எந்தப் பலனும் தராது, பந்தாவாகச் சொல்லிவிட்டு எதுவுமே செய்யாமல் இருக்கிற மூன்றாவது வகை மனிதர்களுக்கு உவமை இது. 
துக்கடா
  • ஔவையார் இந்தப் பாடலை எழுதிப் பல நூறு வருடங்களாகிவிட்டன. ஆனாலும் பலா, மா, பாதிரி மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள், இப்போதும் இந்த வரிகள் அதே பொருளை, அனுபவத்தைத் தருகின்றன, ‘க்ளாசிக்’ கவிதையின் இலக்கணம் இதுதானே?!
  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
  • சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
  • சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல
  • குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
  • பலாமாவைப் பாதிரியைப் பார்
        

மாணவன்

கோடல் மரபே கூறும் காலை
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து
இரு என இருந்து, சொல் எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டு, அவை விடாது உளத்து அமைத்து
போவெனப் போதல் என்மனார் புலவர்
நூல்: நன்னூல்
பாடியவர்: பவணந்தி முனிவர்
சூழல்: பாடம் கேட்டலின் தன்மை, அதாவது மாணவனுக்கான குணங்களைச் சொல்லும் பாடல் இது
ஒருவன் எப்படிப் பாடம் கேட்கவேண்டும் தெரியுமா?
1. சரியான காலத்தில் செல்லவேண்டும்
2. ஆசிரியரை உரிய மரியாதையுடன் வணங்கவேண்டும்
3. அவருடைய குறிப்பை அறிந்து நடக்கவேண்டும்
4. எப்போதும் அவர் சொன்னதை மறுக்காமல் செய்யவேண்டும்
5. அவரது சொல்படி நடக்கவேண்டும்
6. பசியோடு இருப்பவனுக்குச் சாப்பாட்டின்மீது அளவுகடந்த ஆர்வம், ஆசை, வெறி வருமல்லவா? அப்படிப்பட்ட ஒரு வெறி, படிப்பவனுக்குத் தான் படிக்கும் விஷயத்தின்மீது வரவேண்டும்
7. ஓவியத்தில் உள்ள ஓர் உருவம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் இருப்பதுபோல், கவனம் சிதறாமல், மற்ற ஆர்வங்களையெல்லாம் அடக்கிப் படிப்பின்மீது கவனம் செலுத்தவேண்டும்
8. வாத்தியார் சொல்பவற்றைக் காதால் கேட்டு மனத்தில் பதித்துக்கொள்ளவேண்டும்
9. ஒருமுறை கேட்பதோடு நிறுத்திவிடக்கூடாது, அவை மனத்தில் நன்றாகப் பதியும்வரை திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும்
10. ’நீ எல்லாம் கற்றுக்கொண்டுவிட்டாய்’ என்று சொல்லி ஆசிரியரே நம்மை வாழ்த்தி வழி அனுப்பும்போதுதான் அங்கிருந்து கிளம்பவேண்டும், அதற்குள் அரைகுறை ஞானத்துடன் புறப்பட்டுவிடக்கூடாது
துக்கடா
  • இந்தப் பாட்டுக்கு ஒரு நீண்ட பெருமூச்சைத்தவிர வேறென்ன ‘துக்கடா’ எழுதிவிடமுடியும்? ;)

தேடினால் கிடைக்கும்

பொன் செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கு அசைத்தீர்,
முன் செய்த மூ எயிலும் முன் எரித்தீர், முதுகுன்று அமர்ந்தீர்,
மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே
என் செய்தவாறு அடிகேள்? அடியேன் இட்டளம் கெடவே.
நூல்: தேவாரம்
பாடியவர்: சுந்தரர்
முன்கதை
ஒருமுறை, சுந்தரர் விருத்தாசலத்துக்குச் சென்றிருந்தார். அங்கே எழுந்தருளியிருக்கும் சிவனைப் போற்றிப் பாடினார். அவருடைய தமிழைக் கேட்டு மகிழ்ந்த சிவன் பல ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்கினார்.
ஒரே பிரச்னை, சுந்தரரின் வீடு திருவாரூரில் இருக்கிறது. இத்தனை தங்கத்தையும் அவ்வளவு தூரம் பாதுகாப்பாகக் கொண்டுசெல்வது எப்படி? சுந்தரருக்குக் கவலை.
பக்தரின் குழப்பத்தைக் கண்டு சிவன் சும்மா இருப்பாரா? ‘நானே இந்தத் தங்கத்தையெல்லாம் உன் ஊருக்குப் பத்திரமாக wire transfer செய்துவிடுகிறேன்’ என்று அறிவித்தார். ‘நீ எல்லாத் தங்கத்தையும் பக்கத்தில் இருக்கும் மணிமுத்தாற்றில் வீசி விடு, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.’
சுந்தரர் கொஞ்சமும் யோசிக்கவில்லை. சிவன் சொன்னபடி எல்லாத் தங்கத்தையும் ஆற்றில் போட்டார். பயணத்தைத் தொடர்ந்தார்.
கொஞ்ச நாள் கழித்து, அவர் திருவாரூர் வந்து சேர்ந்தார். தனது மனைவி பரவியாரைச் சந்தித்தார். நடந்த கதையையெல்லாம் சொன்னார்.
பரவையாருக்கு அதிர்ச்சி. ‘அத்தனை தங்கத்தையும் ஆற்றில் வீசிட்டீங்களா?’ என்று கேட்டார்.
‘ஆமாம்’ என்றார் சுந்தரர். ‘கவலைப்படாதே, இப்போ அந்தத் தங்கத்தையெல்லாம் நம்ம ஊர்க் கமலாயக் குளத்தில எடுத்துக்கலாம்.’
‘என்னங்க விளையாடறீங்களா? எங்கயோ வீசின தங்கம் இங்கே எப்படிக் கிடைக்கும்?’
‘ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாம் கிடைக்கும்’ என்றார் சுந்தரர். பரவையாரை அழைத்துக்கொண்டு உள்ளூர்க் குளத்துக்கு வந்தார். உள்ளே குதித்துத் தேடினார்.
ம்ஹூம், தங்கத்தைக் காணோம்!
என்ன ஆச்சு? சிவபெருமான் வாக்குத் தவறிவிட்டாரா? அவர் அப்படியெல்லாம் ஏமாற்றுகிற ஆள் இல்லையே.
சிவனுக்குச் சுந்தரரின் தமிழை இன்னும் கொஞ்சம் கேட்கிற ஆசை. அதனால்தான் தங்கத்தை உடனே தராமல் விளையாடினார்.
புரிந்துகொண்ட சுந்தரர், இந்தப் பாடலில் தொடங்கிப் பல பாக்களைப் பாடினார். அதன்பிறகு, அவர் இழந்த தங்கம் தண்ணீரில் மிதந்து வந்ததாகச் சொல்வார்கள்.
உரை
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
பொன் போல் ஒளிர்கின்ற மேனியைக் கொண்டவனே,
புலியின் தோலை இடுப்பில் அணிந்தவனே,
அந்தக் காலத்தில் நன்றாகக் கட்டப்பட்ட மூன்று கோட்டைகளையும் எரித்தவனே,
திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனே,
மின்னல் போன்ற சிறு இடை கொண்ட என் மனைவி பரவையின் முன்னே என்னை ஏன் சோதிக்கிறாய்? இந்தத் துன்பம் நீங்குவதற்கு அருள் புரிவாய்!
துக்கடா
  • இன்றைய கதையின் ப்ராக்டிகல் நீதி, மனைவி முன்னால் பெயரைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைக்கிற கணவன்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் ;)
  • Jokes apart, இந்தப் பாடல் இழந்ததை மீட்க உதவும் பரிகாரப் பாடலாகக் கருதப்படுகிறது. நீங்களும் எதையாவது தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருந்தால், தினமும் 21 முறை இந்தப் பாடலைச் சொல்லிவரலாம். பலன் கிடைக்குமாம்!
  • இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், வானதி. அவருக்கு நன்றிகள்
  • திருமுதுகுன்றம் பற்றிச் சுந்தரர் பாடிய மற்ற பாடல்கள் இங்கே : http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/DM7_25.HTM
  • ‘மூன்று கோட்டைகளையும் எரித்தவனே’ என்ற வரியில் சுவாரஸ்யமான ஓர் உபகதை உள்ளது. அது இங்கே : http://tamildoubt.blogspot.com/2011/10/blog-post_21.html
  • ஆனால் உண்மையில், ’முப்புரம் அழித்தல்‘ என்பது மூன்று கோட்டைகளைக் குறிப்பதே அல்ல என்றும் சொல்கிறார்கள். ’நமக்குள் இருக்கும் ஆணவம், மாயை, வினைகள் என்ற மூன்று விதமான கெட்ட குணங்களை அழிக்கிறவன் இறைவன்’ என்பது சைவ சித்தாந்தம்
  • இன்றைய அரிய சொல் : எயில் = கோட்டை / மதில் / நகரம்
  • உதாரணங்கள்:
  • 1. எயில் கதவம் : புறநானூறு
  • 2. ஆர் எயில் மூன்றும்… : ஆசாரக்கோவை

அரும்பெறல் பாவாய்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த,
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகு என
*
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டாகலின்
உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவமாக ஈக்க
*
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென
*
அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இருமுறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது
*
மா இரும் பீலி மணிநிற மஞ்சை நின்
சாயல் குடைந்து தண்காண் அடையவும்
*
அன்னம் நன்னுதல் மென் நடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்
*
அளிய தாமே சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்
மடநடை நின் மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின
*
நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்!
*
பல்லிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல் அவிழ் மாலையொடு என்னுற்றனர் கொல்!
*
நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்!
*
திருமுலைத் தடத்து இடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்!
*
திங்கள் முத்து அரும்பவும் சிறு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர் என்னுற்றனர் கொல்!
*
மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலைஇடைப் பிறவா மணியே என்கோ!
அலைஇடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழ்இடைப் பிறவா இசையே என்கோ!
நூல்: சிலப்பதிகாரம் (மனை அறம் படுத்த காதை)
பாடியவர்: இளங்கோ அடிகள்
சூழல்: முதல் இரவு. கோவலன் கண்ணகியைப் பாராட்டிப் பேசுகிறான்
தேவர்கள் போற்ற, சிவபெருமானின் முடிமீது அழகாக வீற்றிருக்கிறது பிறை நிலா. ஆனால் அந்த நிலா உன்னுடைய சகோதரி, பாற்கடலில் திருமகளான உன்னோடு கூடப் பிறந்தது. ஆகவே, சிவன் தனது பிறை நிலாவை உன்னுடைய நெற்றியாகக் கொடுத்துவிட்டான்.
*
போரில் கலந்துகொள்ளும் வீரர்களுக்குப் படைக்கருவிகளை அளிப்பது வழக்கம். ஆகவே, என்னோடு காதல் போர் செய்ய வரும் உனக்குத் தன்னுடைய பெரிய கரும்பு வில்லை இரண்டு கருத்த புருவங்களாகச் செய்து கொடுத்தான் உருவம் இல்லாத மன்மதன்.
*
அமுதம் என்பது அழிவு இல்லாத மருந்து. ஆனால் அந்த அமுதத்துக்கு முன்னால் பிறந்த திருமகள் நீ. ஆகவே, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் தன்னுடைய காவலுக்காக வைத்திருந்த வச்சிரம் என்ற ஆயுதத்தை உனக்குக் கொடுத்துவிட்டான். நீ அதை உன் மெலிந்த இடையாகச் செய்துகொண்டுவிட்டாய்.
*
ஆறுமுகன் முருகனுக்கு என்மேல் என்ன கோபமோ தெரியவில்லை, என்னைத் துன்புறுத்துவதற்காகவே தன்னுடைய அழகிய சுடர் மிகுந்த நெடுவேல் உன் முகத்தில் குளிர்ச்சியான இரண்டு கண்களாக மாறும்படி செய்துவிட்டான்.
*
கருத்த பெரிய தோகையையும் நீலமணி போன்ற நிறத்தையும் உடைய மயில்கள் உன்னுடைய அழகின்முன்னால் தோற்றுவிட்டன. குளிர்ச்சி மிகுந்த காட்டில் சென்று ஒளிந்துகொண்டன.
*
மயில்களைப்போலவே, அன்னங்களும் உன்னுடைய நடைக்கு முன்னால் படுதோல்வியடைந்தன. நல்ல நீரை உடைய வயல்களில் நிறைந்திருக்கும் மலர்களுக்கு நடுவே சென்று பதுங்கிக்கொண்டன.
*
ஒருவிதத்தில் இந்த மயில்களும் அன்னங்களும்கூடப் பரவாயில்லை, பச்சைக் கிளிகளின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம்!
குழலும் யாழும் அமுதமும் சேர்ந்து குழைத்த உன்னுடைய மழலைப் பேச்சுக்குமுன்னால் அந்தக் கிளிகளின் பேச்சு எடுபடவில்லை. ஆனாலும் மென்மையான நடையைக் கொண்ட உன்னை விட்டு அவை நீங்க விரும்பவில்லை. உன் மலர் போன்ற கையிலேயே தங்கியிருந்து உன்னுடைய பேச்சைக் கேட்டுப் பழகிக்கொள்ளலாம் என்று திட்டமிடுகின்றன.
*
மணம் மிகுந்த மலர்களை அணிந்த கோதையே, உனக்கு அலங்காரம் செய்கிற பெண்களுக்கு அறிவே கிடையாதா? குற்றம் இல்லாத உன் இயற்கை அழகு இருக்க, அதன்மீது வேறு நகைகளைப் பூட்டுகிறார்களே, அதனால் என்ன பயன்?
*
அடர்த்தியான உன்னுடைய கூந்தலில் ஒன்றிரண்டு மலர்களைச் சூடினால் போதாதா? இத்தனை பெரிய மாலையைச் சுமத்தவேண்டுமா?
*
உன் கூந்தலுக்கு மணம் நிறைந்த நல்ல அகில் புகையை ஊட்டினார்கள். சரி. அதற்குமேல் கஸ்தூரிச் சாந்து பூசியது எதற்காக?
*
அழகிய உன் மார்புகளில் தொய்யில் (சந்தனக் கோலம்) வரைந்தார்கள். சரி. அதற்குமேல் ஓர் ஒற்றை வட முத்துமாலையை அணிவித்திருப்பது எதற்காக?
*
அவர்கள் இத்தனை நகைகளையும் உனக்கு அணிவித்துவிட்டதால், உன்னுடைய சிறு இடை பாரம் தாங்காமல் நோகிறது. நிலா போன்ற உன் முகத்தில் முத்துபோல் வியர்வை அரும்புகிறது. இப்படி உன்னை வருந்தச் செய்த அவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!
*
குற்றம் இல்லாத (24 காரட் :) பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே!
உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா?
077/365
Posted in அகம், இளங்கோவடிகள், காதல், சிலப்பதிகாரம், வர்ணனை | 13 Comments

பித்தா!

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!
நூல்: தேவாரம்
பாடியவர்: சுந்தரர்
சூழல்: நேற்றைய #365paa காண்க
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
பித்தா, பிறை சூடியவனே, பெருமானே, அருளாளனே, பெண்ணை நதியின் தென்கரையில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருள்துறையில்எழுந்தருளியிருக்கும் என் தந்தையே,
என் மனத்தில் நீ குடியேறிவிட்டாய், உன்னை எந்த வகையிலும் மறக்காதவனாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
நான் என்றென்றும் உன் பக்தன்தான். ஆனால் விதிவசத்தால் அதை மறந்தேன். ‘நான் உனக்கு அடிமை இல்லை’ என்று வீம்பாகப் பேசினேன். நீ யார் என்று உணர்ந்தபிறகு, இனி அப்படிச் சொல்லமுடியுமா?
துக்கடா
  • நேற்றைய, இன்றைய #365paa காட்சிகளைத் திரை வடிவத்தில் பார்க்கவும், இன்றைய பாடலை இசை வடிவத்தில் கேட்கவும் இங்கே செல்லலாம் – ‘திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்திலிருந்து வரும் காட்சிகள் இவை:
  • Part 1 –> http://www.youtube.com/watch?v=anm0FHSR7RM
  • Part 2 –> http://www.youtube.com/watch?v=wa73TTQoUdE
  • Part 3 –> http://www.youtube.com/watch?v=P9MIsaVgU3o
  • ‘பித்தா! பிறைசூடி!’ பாடலை வேறு வடிவங்களில் கேட்கச் சில இணைப்புகள்:
  • டி. எம். சௌந்தர்ராஜன் குரலில் –> http://ww.smashits.com/thevaram/pitha-pirai-soodi/song-207318.html
  • திருத்தணி என். சுவாமிநாதன் குரலில் –> http://www.raaga.com/play/?id=44363
  • சேர்ந்திசை வடிவத்தில் –> http://www.youtube.com/watch?v=z67ah4gwAD8
  • இன்னும் உங்களுக்குத் தெரிந்த வேறு ஒலி வடிவங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், சேர்த்துவிடுகிறேன்
076/365
Posted in கதை கேளு கதை கேளு, சினிமா, சிவன், சுந்தரர், தேவாரம், பக்தி | 17 Comments

என்ன சொல்லிப் பாடுவேன்?

மாசுஇலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம், பித்தனோ மறையோய்?’ என்றார்.
*
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்’ என்றார், நின்ற
வன் பெரும் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
நூல்: திருத்தொண்டர் புராணம் – சுந்தரமூர்த்தி நாயனார் புராணம் (#176 & 209)
பாடியவர்: சேக்கிழார்
சூழல்: இரு பாடல்களும் வெவ்வேறு சூழல்களில் வருபவை. ஆனால் தொடர்புள்ளவை. அதனை உரையோடு பார்த்தால் புரியும்
திருநாவலூர் என்ற ஊரில் நம்பி ஆரூரர் என்பவருக்குத் திருமணம். அங்கே ஓர் அந்தணர் வருகிறார். ‘கல்யாணத்தை நிறுத்துங்கள்’ என்கிறார். காரணம் கேட்டால் ‘இந்த நம்பி ஆரூரன் என்னுடைய அடிமை’ என்கிறார். அப்போது…
குற்றம் இல்லாத மரபில் தோன்றிய வள்ளல் நம்பி ஆரூரருக்கு அந்த அந்தணரைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது. ஆனால் முற்பிறவியில் சிவனுக்குப் பெரும்தொண்டு செய்து வாழ்ந்த அவருக்கு, அந்தணர் வேடத்தில் வந்திருப்பது சிவன்தான் என்பது எப்படியோ சிந்தனையில் தோன்றியிருக்கவேண்டும். அந்த நேசத்தால் அவர் வந்தவரைக் கேலி செய்து சிரிக்கவில்லை. பொறுமையாகப் பேசினார்:
‘குற்றம் இல்லாத அந்தணர்கள் இன்னோர் அந்தணருக்கு அடிமையாவது வழக்கத்தில் இல்லையே. இப்படி நீ சொல்வது விநோதமாக உள்ளது, நீ என்ன பித்தனா?’
*
அதன்பிறகு, வழக்கு நடக்கிறது. நம்பி ஆரூரர் அந்த அந்தணருக்கு அடிமைதான் என்பது முடிவாகிவிடுகிறது. சிவன் தன்னுடைய திருவிளையாடலை முடித்துக்கொண்டு தனது நிஜமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். நம்பி ஆரூரர் ஆச்சர்யத்தில் மூழ்குகிறார். ‘இறைவா, உன்னை என்ன சொல்லிப் பாடுவேன்!’ என்று நெகிழ்கிறார். அப்போது…
அழகிய கண்களைக் கொண்ட சிவபெருமான் தன்னுடைய அன்பராகிய நம்பி ஆரூரரை அருள் பொங்கப் பார்த்தார். ‘முன்பு என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகவே, அந்தச் சொல்லையே என்னுடைய பெயராக வைத்துப் பாடு’ என்று ஆணையிட்டார். பெரும் தொண்டராகிய நம்பி ஆரூரரும் அந்த வள்ளலைப் பாடத் தொடங்கினார்.
துக்கடா
  • வழக்கு தொடங்குவதற்கு முன்னால் நம்பி ஆரூரர் சிவனை(அதாவது அந்த அந்தணரை)ப் ‘பித்தன்’ என்று திட்டியிருந்தார். வழக்கு முடிந்தபிறகும் அந்த வார்த்தையை மறக்காமல் நினைவு வைத்துக்கொண்டு பேசுகிறார் சிவபெருமான். இப்போது ‘சுந்தர மூர்த்தி நாயனார்’ ஆகிவிட்ட நம்பி ஆரூரரை அதே வார்த்தையை முதல் வரியாக வைத்துப் பாடப் பணிக்கிறார்
  • சுந்தரர் என்ன பாடினார்? அந்தப் பாட்டு நாளைய #365paa
075/365
Posted in கதை கேளு கதை கேளு, சிவன், சுந்தரர், சேக்கிழார், நாடகம், பக்தி | 12 Comments

நின்ற தவம்

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ – கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டிருக்கப் பெற்ற குணம்.
நூல்: முத்தொள்ளாயிரம் (#75)
பாடியவர்: தெரியவில்லை
பாடப்பட்டவர்: பாண்டியன்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
கார் காலம். நல்ல மணம் கொண்ட நீல நிறக் குவளைப் பூ தினந்தோறும் நீர்நிலையின் மத்தியில் நின்றபடி தவம் செய்கிறது. எதற்காக?
கூரான நுனி கொண்ட வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்தவன், விரைந்து செல்லும் குதிரையைக் கொண்டவன், பாண்டியன் வழுதியின் மார்பைச் சேரும் பெருமைக்காகதான் அந்தக் குவளை மலர் தவம் இருக்கிறதோ?
துக்கடா
  • சாதாரணமாகக் குளத்தில் நிற்கிறது குவளை மலர். அதன்மீது ‘பாண்டியன் மார்பைச் சேர்வதற்காகத் தவம் செய்கிறாயோ’ என்று புலவர் தன்னுடைய குறிப்பை / கற்பனையை ஏற்றிச் சொல்வதால் இந்தப் பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது
  • இந்தப் பாடலின் மையக் கருத்தைச் சற்றே நீட்டி ஒரு காதல் பாட்டில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து:
வெள்ளிமலரே,
*
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய், ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய், மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய், சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய், இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ?
*
வெள்ளி மலர் அன்று இயற்றிய தவம் எதற்கு? பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு!
  • ’முத்தொள்ளாயிரம்’ (கிடைத்துள்ள) பாடல்கள் அனைத்திற்கும் நான் எளிய உரை ஒன்று எழுதியுள்ளேன். அது கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும் –> https://www.nhm.in/shop/978-81-8493-455-7.html
074/365
Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சினிமா, பாண்டியன், முத்தொள்ளாயிரம், வெண்பா | 3 Comments

உடைத்து

வேழம் உடைத்து மலைநாடு; மே தக்க
சோழ வளநாடு சோறு உடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்து உடைத்து; தெள்நீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: ஔவையார்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
மலைகள் அதிகம் உள்ள சேரனின் நாட்டில் சிறந்த யானைகள் நிறைந்திருக்கும்.
மேன்மை கொண்ட சோழனின் நாட்டில் வயல்கள் நன்கு வளமாக விளையும், சோறு நிறைந்திருக்கும்.
பூழியர்களின் தலைவனாகிய பாண்டியனின் தென்னாட்டில் முத்துகள் நிறைந்திருக்கும்.
தெளிவான நீர் நிரம்பி நிற்கும் வயல்களைக் கொண்ட தொண்டை நன்னாட்டில், நல்ல சான்றோர்கள் நிறைந்திருப்பார்கள்.
துக்கடா
  • ’பூழியர்’ என்பது ‘பாண்டியர்’களைக் குறிக்கும் சிறப்புச் சொல்
  • ‘தொண்டை நாடு’ என்பது தமிழகத்தின் வடகிழக்குப் பகுதி. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது
073/365
Posted in ஔவையார், சேரன், சோழன், தனிப்பாடல், பாண்டியன், புகழ்ச்சி, வெண்பா | 5 Comments

சிறியவர், பெரியவர்

தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
நூல்: நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை (#16, 17, 18 & 19)
பாடியவர்: அதிவீர ராம பாண்டியர்
’சுருக்’ விளக்கம்: யாரையும் உருவத்தை வைத்து எடைபோடாதே!
முழு விளக்கம்:
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
சுவையான பனம்பழம் நன்கு பெரிதாகத் திரண்டிருக்கும். அதில் உள்ள ஒரு விதை வானை எட்டும் அளவுக்கு உயரமாக வளரும்.
ஆனால், அந்தப் பனைமரத்தின் அடியில் ஒருவர்கூட நிழலுக்கு ஒதுங்கமுடியாது.
பனம்பழத்தோடு ஒப்பிடுகையில் ஆலம்பழம் மிகச் சிறியது. அதில் உள்ள ஒரு விதையைக் கையில் எடுத்துப் பார்த்தால், தெளிந்த நீரை உடைய குளத்தில் வசிக்கும் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகதான் இருக்கும்.
ஆனால் அந்த விதை வளர்ந்ததும் பிரமாண்டமான ஆல மரமாகும். அதன் நிழலில் பெரிய அரசரும் அவருடைய காலாட்படையும் யானைப்படையும் குதிரைப்படையும் அலங்கரிக்கப்பட்ட தேரும்கூடத் தங்கமுடியும்.
ஆக, நாம் பெரியவர் என்று நினைப்பவர்கள் எல்லாம் பெரியவர்களும் இல்லை, சிறியவர் என்று நினைப்பவர்கள் எல்லாம் சிறியவர்களும் இல்லை!
துக்கடா
  • வெற்றிவேற்கை / நறுந்தொகை நூலை நம்மில் பலர் பள்ளிக் காலத்தில் படித்திருப்போம். அதனை எளிய உரையுடன் முழுமையாகப் படிக்க இங்கே செல்லலாம் –> http://www.tamilvu.org/library/l6150/html/l6150ind.htm
072/365
Posted in அதிவீர ராம பாண்டியன், அறிவுரை, உவமை நயம், வெற்றிவேற்கை / நறுந்தொகை | 4 Comments

நலம் கொடுக்கும் நலமே

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,
……காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,
……மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
……நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
……என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!
நூல்: திருவருட்பா (#4128)
பாடியவர்: ராமலிங்க வள்ளலார்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்ற மகிழ்ச்சியானவனே, உன்னைப் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எல்லாருக்கும் பார்வை தரும் கண்ணாக இருக்கின்றவனே,
ஒரு செயலைச் செய்யும் வல்லமை கொண்டவர்களுக்கும், செய்யமுடியாதவர்களுக்கும் அதைச் செய்து முடிப்பதற்கான வரத்தை அருளும் வரமே, உன்னை மதிப்பவர்களுக்கும் மதிக்காதவர்களுக்கும் அறிவாக இருக்கும் அறிவே,
நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் நடுவில் நின்று எல்லாருக்கும் அருள் புரிகின்றவனே, மனிதர்கள், தேவர்கள் எல்லாருக்கும் நலம் தரும் நலமே,
இப்படி எல்லா வகையானவர்களுக்கும் பொதுவாக நடனம் ஆடுகின்ற சிவனே, நான் சொல்லும் பாராட்டுப் பாமாலையை அணிந்துகொண்டு அருள் செய்!
துக்கடா
  • ’ராகா’ இணைய தளத்தில் இந்தப் பாடலை எம். எஸ். சுப்புலஷ்மி அவர்கள் பாடக் கேட்கலாம் –> http://www.raaga.com/play/?id=139202 (இணைப்பு வழங்கிய நண்பர் @kryes அவர்களுக்கு நன்றி!)
  • இன்றைய பா போஸ்ட் செய்தபின்னர் இணையத்தில் இதற்கான வேறு விளக்கங்கள் உள்ளதா என்று தேடியபோது ஒரு சுவாரஸ்யமான இணைப்பு கிடைத்தது. ‘எல்லோருக்கும்’ என்று எழுதுவது தவறு, ‘எல்லாருக்கும்’ என்பதுதான் சரி என்று தெரிந்துகொண்டேன் –> http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/3fc52384495e6252
  • சட்டென்று இங்கே வந்து தேடினால், நான்கு இடங்களில் ‘எல்லோருக்கும்’ என்று எழுதியிருக்கிறேன் :( திருத்தினேன், நீங்களும் கவனமாக இருங்கள்
071/365
Posted in சிவன், திருவருட்பா, பக்தி, வர்ணனை, வள்ளலார் | 7 Comments

சொல் ஒன்று, பொருள் பத்து!

கடி என் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற்றுஆ ஈரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே
நூல்: தொல்காப்பியம் (#866, உரியியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
சூழல்: ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கக்கூடும் என்று ஓர் உதாரணத்துடன் விளக்குகிறது இந்தப் பாடல்
’கடி’ என்ற சொல்லுக்குப் பத்து பொருள்கள் உண்டு. அவை:
  • நீக்குதல்
  • கூர்மை
  • காவல்
  • புதுமை
  • வேகம்
  • விளக்கம்
  • அதிகம்
  • சிறப்பு
  • அச்சம்
  • சபதம் செய்தல் / சூள் உரைத்தல்
070/365
Posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல், வார்த்தை விளையாட்டு | 5 Comments

நண்பர் படைப்பு – 2

இந்தப் பதிவை எழுதியவர், நண்பர் கிரி சுப்ரமணியம்:
நீங்களும் உங்களது விருப்பப் பாடல்களை எளிய விளக்கத்துடன் எழுதி அனுப்பலாம் :) (ஈமெயில் முகவரி nchokkan@gmail.com)
.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தயும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே!
நூல்: குறுந்தொகை (#40)
பாடியவர்: செம்புலப் பெயனீரார்
திணை: குறிஞ்சி
சூழல்: நம் எல்லோர்க்கும் ரொம்பவும் நெருக்கமான காதற்சூழல்
உன் தாயும் என் தாயும் யார் யார் என நாம் அறிந்தவர்களில்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் என்பதையும் நாம் அறியோம். நானும் நீயும் கூட இதுவரை சந்தித்தவர்களில்லை.  இருந்தும் செம்மண்ணில் கலந்திட்ட மழை நீர்போல நம் இருவரின் அன்பு நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டனவே.
துக்கடா:
  • செம்புலம் என்ற வார்த்தை “செம்மண், பாலை” என இரு பொருள்களையும் கொண்டது. ”பாலை மண்ணில் கலந்த நீர்போல் கலந்திட்டோமே” எனப் பொருள் கூறுபவர்களும் உண்டு
  • இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் உண்மையான பெயர் தெரியவில்லை. ஆதலால் இவர் இயற்றிய புகழ்பெற்ற இப்பாடலில் இடம்பெற்ற உவமையின் பெயராலேயே இவர் வழங்கப்படுகிறார்
Posted in குறிஞ்சி, குறுந்தொகை, நண்பர் படைப்பு, நண்பர் விருப்பம் | 8 Comments

போரில்லா உலகு

பேர்அமர் மலர்க்கண் மடந்தை! நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே
போர் உடை வேந்தன் பாசறை
வாரான் அவன் எனச் செலவு அழுங்கினனே.
நூல்: ஐங்குறுநூறு (#427)
பாடியவர்: பேயனார்
சூழல்: முல்லைத்திணை – போர் தொடங்கும் சூழல், அவளுடைய காதலன் ஒரு படைவீரன், போர் ஆரம்பமானதும் அவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று இவள் பதறுகிறாள், காதலன் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
பெரிய, மலர் போன்ற கண்களை உடைய மடந்தையே,
நான் போருக்குப் புறப்படுவதாக இருந்தேன். ஆனால் நீயோ ‘இப்போதுதான் கார் காலம் தொடங்கியிருக்கிறது’ என்று சொல்லி என்னை விடமறுத்தாய்.
கவலைப்படாதே, இப்போது நான் எங்கேயும் செல்லப்போவதில்லை. காரணம், இந்தப் போருக்கு ஏற்பாடு செய்திருக்கும் அரசனும் அவனுடைய காதலியைப் பிரிந்து இருண்ட பாசறைக்கு வரமாட்டானாம்!
069/365
Posted in அகம், ஐங்குறுநூறு, பிரிவு, முல்லை | 8 Comments

பாதம் பணிந்தபின்னே…

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே
நூல்: அபிராமி அந்தாதி (#24)
பாடியவர்: அபிராமி பட்டர்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
அபிராமியே,
மணியே, அந்த மணியின் ஒளியே, ஒளிர்கின்ற மணிகளைச் சேர்த்துக் கோர்த்த அணி(நகை)யே, அந்த நகையின் அழகே,
உன்னை நம்பி நெருங்காதவர்களுக்கு நோயாகவும், விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறவளே, தேவர்களுக்கெல்லாம் பெருவிருந்தாக வரம் அருளும் அன்னையே,
உன்னுடைய தாமரைப் பாதங்களைப் பணிந்து வணங்கியபின், வேறு எவரையும் நான் வணங்கமாட்டேன்!
துக்கடா
  • அபிராமி அந்தாதி முழுமைக்கும் கண்ணதாசன் உரை எழுதியுள்ளார். அதனை இங்கே இலவசமாகப் படிக்கலாம் / டவுன்லோட் செய்துகொள்ளலாம் –> http://www.archive.org/details/AbiramiAnthathi
  • அதே கண்ணதாசன் ‘ஆதி பராசக்தி’ என்ற படத்தில் அபிராமி பட்டரின் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு சூழலுக்குப் பாட்டெழுதியிருக்கிறார். ‘சொல்லடி அபிராமி’ எனத் தொடங்கும் அந்தப் பாடலின் தொகையறாவாக அபிராமி அந்தாதியின் ஒரு பாடலே பயன்படுத்தப்பட்டது. அதுதான் இன்றைய #365paa
  • கே. வி. மகாதேவன் இசையில் டி. எம். சௌந்தர்ராஜன் குரலில் இந்த அபிராமி அந்தாதிப் பாடலையும் கண்ணதாசனின் ‘சொல்லடி அபிராமி’யையும் கேட்க, பார்க்க இந்த வீடியோ –> http://www.dailymotion.com/video/xfhxjg_solladi-abhirami_school
068/365
Posted in அபிராமி, அபிராமி பட்டர், சினிமா, பக்தி, வர்ணனை, Uncategorized | 4 Comments

முட்டாதே

ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்உரைக்குக்
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்
முசுக்குத்தி நக்கும் மலைநாட! தம்மைப்
பசுக்குத்தின் குத்துவார் இல்
நூல்: பழமொழி நானூறு (#57)
பாடியவர்: முன்றுரையரையனார்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
ஆண் குரங்கு தேன் கூட்டைக் கிழித்து அதில் இருந்து ஒழுகும் தேனைக் குடிக்கும் வளம் மிகுந்த மலை நாட்டின் தலைவனே,
பசு ஒன்று நம் மீது முட்ட வருகிறது. உடனே யாராவது கோபப்பட்டு அந்தப் பசுவைத் திருப்பி முட்டுவார்களா? அதுபோல, ஆராய்ந்த அறிவு இல்லாதவர்கள் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டால், உன்னைப்போல் நன்கு படித்தவர்கள் கோபப்படமாட்டார்கள், அவர்களோடு வீண் சண்டை போடமாட்டார்கள்.
067/365
Posted in அறிவுரை, உவமை நயம், பழமொழி நானூறு, Uncategorized | 16 Comments

YPL ;)

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்
மாறாது உற்ற வடுப் படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…
நூல்: மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
பாடியவர்: மாங்குடி மருதனார்
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
அவுணர்களின் கூட்டத்தை அழித்தவர், பொன்னால் செய்த மாலையை அணிந்திருக்கும் திருமாலின் பிறந்த நாள், திருவோணம் என்கிற நல்ல நாள்.
ஓணத் திருநாளை மறவர்கள் பெரிய விழாவாகக் கொண்டாடுவார்கள். அடிக்கடி போர் செய்வதால் அவர்களுடைய உள்ளங்கையில் ஆயுதங்களின் தழும்புகள் விழுந்திருக்கும்.
மறவர்கள்மட்டுமா? அவர்களுடைய யானைகளும் வீரம் செறிந்தவைதான். அவற்றின் முகத்தில் அங்குசம் குத்திக் குத்தி வடு விழுந்திருக்கும், எதிரியின் யானைகளோடு கடுமையாக முட்டி மோதுவதால் அவற்றின் தந்தங்கள் இந்த யானைகளின் நெற்றியில் வடுவாகப் பதிந்திருக்கும்.
ஓணத் திருநாளன்று மறவர்கள் தங்களுடைய பெரிய யானைகளை மோதவிடுவார்கள். இதைப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம் வரும். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றின்மீது ஏறி நின்று யானைச் சண்டையை ரசிப்பார்கள்.
அந்தக் குன்றின்மீது பருக்கைக் கற்கள் பதிந்திருக்கும். அவை இந்த மக்களின் காலைக் குத்தி உறுத்தும், வலிக்கும். ஆனால் அதையெல்லாம் யார் கவனித்தார்கள்? எல்லோரும் கள்ளைக் குடித்து மயக்கத்தில் திரிவார்கள்.
துக்கடா
  • அனைவருக்கும் ஓண நல் நாள் வாழ்த்துகள்
  • ஓணம் மலையாளப் பண்டிகையாச்சே, இதற்கெல்லாம் பழந்தமிழ் இலக்கியத்தில் பாடல் இருக்காது என்று நினைத்தேன். ‘ஏன் இல்லை?’ என்று இந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தார் நண்பர் @kryes – #365paa மீது அவர் காட்டும் ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் திரும்பத் திரும்ப எத்தனைமுறை நன்றி சொல்வது? போரடிக்கிறது :> ஆனாலும் நன்றி :)
  • இந்தப் பாட்டில் வரும் யானைச் சண்டையைப் படிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு Gladiator / American Base Ball Match சூழல் வருகிறது ;)
  • யானைச் சண்டையைப் பார்ப்பதற்கு எதற்கு குன்று? அதில் எதற்குக் கற்களைப் பதித்திருக்கிறார்கள்? எல்லாம் காரணமாகதான்! சண்டை மும்முரத்தில் ஒருவேளை யானைகள் இந்தப் பார்வையாளர்கள்மீது திரும்பிவிட்டால்? விபரீதமாகிவிடும் அல்லவா, அதனால், யானைகள் சுலபத்தில் ஏறமுடியாத ஒரு குன்றின்மீதுதான் பார்வையாளர்கள் நிற்பார்கள். அப்படியே மீறி ஏறிவிட்டாலும் யானைகளின் கால்களை உறுத்தவேண்டும் என்பதற்காக அந்தக் குன்றில் சிறிய (பருக்கைக்) கற்கள் நிறைய இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அப்போதுதான் யானைகள் வலி தாங்காமல் கீழே வந்துவிடும், மக்கள் பிழைப்பார்கள்
  • இத்தனை பாதுகாப்பு ஏற்பாடு செய்து என்ன? கள் குடித்த ஜனங்கள் அந்தக் கிறக்கத்தில் காலில் கல் குத்துகிற வலியையும் பொருட்படுத்தாமல் குன்றிலிருந்து கீழே இறங்கிவருகிறார்கள், தப்பாச்சே மக்கா!
066/365
Posted in நண்பர் விருப்பம், பண்டிகை, மதுரைக் காஞ்சி | 6 Comments

எல்லாம் நிரம்பியது

ஆதி நெடும்தேர் பரிவிட்டு அவை ஆற்றி,
கோது இல் அடிசில் குறை முடிப்பான், மேதிக்
கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன்
மடைவாயில் புக்கான் மதித்து.
*
ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல், யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே – பொன்தேர்
வரப் பாகன் புக்க மனை.
நூல்: நளவெண்பா
பாடியவர்: புகழேந்திப் புலவர்
சூழல்: அரசனாக இருந்த நளன் சூழ்நிலை காரணமாகத் தன் நாட்டை இழக்கிறான், மனைவி, குழந்தைகளைப் பிரிகிறான், இன்னோர் அரசனிடம் தேர்ப் பாகனாக வேலை செய்கிறான். அவ்வப்போது ஓய்வு நேரத்தில் சமையலும் செய்கிறான் (அஞ்ஞாதவாசத்தின்போது பீமன் போல). தன் முதலாளியுடன் அவன் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது, நளன் சமையல் செய்யும் காட்சி இது
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
எருமைகள் குவளை மொட்டுகளை மேய்கின்றன. அவற்றை மென்றபடி நடக்கின்றன. அப்போது அந்த எருமைகளின் வாய் ஓரத்தில் கருநீல நிறக் குவளை அரும்புகள் மலர்கின்றன. அப்படிப்பட்ட வளமான நாட்டைச் சேர்ந்தவன் நளன்.
அந்த நளன், இப்போது ஒரு சிறந்த, பெரிய தேரை ஓட்டி வந்தான். பயணம் முடிந்ததும் தனது குதிரைகளை அவிழ்த்து இளைப்பாறவிட்டான். பின்னர் குற்றம் இல்லாத சமையலைச் செய்வதற்காக மடப்பள்ளி(சமையலறை)யினுள் புகுந்தான்.
*
பொன் தேரை ஓட்டுகின்ற பாகனாகிய நளனிடம் தண்ணீர், விறகு, காய்கறிகள், மளிகை சாமான்கள் எவையும் இல்லை. ஆனால், ஒரு வரம் இருந்தது. அதனால், அவன் நுழைந்த சமையலறை சிறிது நேரத்தில் சாப்பாட்டுப் பண்டங்களால் நிரம்பி வழிந்தது – பழங்கால வேத நூல்கள் அனைத்தையும் படித்து உணர்ந்துகொண்ட நீதிநெறியாளர்களின் நெஞ்சத்தைப்போல!
துக்கடா
  • நளன் கதை மிகச் சுவாரஸ்யமானது, ஏகப்பட்ட திருப்பங்கள், அசாத்தியக் கற்பனைகள் நிறைந்தது – இங்கே இரண்டாவது பாடலில் வரும் ‘வரம்’ அப்படிப்பட்ட ஒரு சுவையான கிளைக்கதை:
  • தமயந்திக்குச் சுயம்வரம். ஓர் அன்னத்தின்மூலம் தமயந்தியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த நளன் அவளைத் திருமணம் செய்துகொள்வதற்காக வருகிறான். அவனை இந்திரன் வழிமறிக்கிறான். ‘எச்சூச்மீ, தமயந்தியிடம் போய் எங்களைப் பற்றி உயர்வாகச் சொல்லு’ என்கிறான். இவனும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு தன் காதலியிடமே இன்னொருவருக்காகத் தூது போகிறான், ‘இந்திரன் நல்லவரு, வல்லவரு, அவரைத்தான் நீ கட்டிக்கணும்’ என்கிறான் (என்ன? தமிழ் சினிமாக் கதைமாதிரி இருக்கா? ;) )
  • நல்லவேளையாக, நளன் சொல்லும் ‘தூதுச் செய்தி’யை தமயந்தி மதிப்பதில்லை. ’டேய் மடையா, உனக்காகதாண்டா இந்தச் சுயம்வரமே!’ என்று சொல்லிவிடுகிறாள். நளன் குஷியாகத் திரும்பி வருகிறான்.
  • தேவர்கள் விசாரிக்கிறார்கள். ‘என்னாச்சு? தமயந்தியைப் பார்த்தாயா? சேதி சொன்னாயா?’
  • நளன் படுபுத்திசாலித்தனமாக, ‘பார்த்தேன். சொன்னேன்’ என்கிறான். அப்புறம் நடந்ததைச் சொல்லவில்லை.
  • மகிழ்ச்சியடைந்த தேவர்கள் நளனுக்குப் பல வரங்களை அளிக்கிறார்கள். அவற்றில் ஒன்று, அவன் எங்கே இருந்தாலும் சமையல் செய்யத் தண்ணீரோ, நெருப்போ, காய்கறிகளோ மற்ற மளிகை சாமான்களோ தேவையில்லை. சுவையான சாப்பாடுமட்டும் தானாகச் சமைக்கப்பட்டுவிடும்.
  • சரி சரி, கற்பனையை நிறுத்துங்கள் ;)
065/365
Posted in கதை கேளு கதை கேளு, நளவெண்பா, நாடகம், வெண்பா | 9 Comments

மும்முனைப் போட்டி

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ – மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே!
நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி
பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்
சூழல்: கதாநாயகி வசந்தவல்லி தோழிகளோடு பந்து விளையாடும் காட்சி
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
தலையில் நிலாவை அணிந்த திருக்குற்றாலநாதர் சிறு பலா மரத்தடியில் எழுந்தருளியிருக்கிறார். சங்குப் பூச்சிகள் அணியாகச் செல்லும் அந்தத் தெருவில் பச்சை வளையல் அணிந்த வசந்தவல்லி தன் தோழிகளுடன் பந்து விளையாடுகிறாள்.
அதைப் பார்க்கிறவர்களெல்லாம் ‘யார் இவள்?’ என்று வியந்துபோகிறார்கள். ‘திருமகளா? ரதிதேவியா? தேவலோகத்தைச் சேர்ந்த ரம்பையா? மோகினியோ?’ எனக் கேள்விகளை அடுக்குகிறார்கள்.
வசந்தவல்லியின் அழகுமட்டுமில்லை, அவளது விளையாட்டு நுட்பமும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ‘பந்தை அடிக்கும்போது இவளது மனம் முந்துகிறதா, அல்லது கண்கள் முந்துகின்றனவா, அல்லது கைகள் முந்துகின்றனவா?’ என்று திகைக்கிறார்கள். அந்த அழகான மும்முனைப் போட்டியைக் கண்டு ரசிக்கிறார்கள்.
துக்கடா
  • ’மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ’ என்கிற இந்தக் கேள்வி இன்றைக்கும் நவீன விளையாட்டு அலசல்களில் பயன்படுத்தப்படுவதுதான், சந்தேகமிருந்தால் ஒவ்வொரு துறையின் ஜீனியஸ்களுடைய ஆட்ட வீடியோக்களைத் தேடிப் பாருங்கள், ‘எப்படிய்யா அந்த ஷாட்டை ஆடினான்?’ என்று இதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்போம் :)
  • இந்தப் பாடல் ‘காதலன்’ என்ற படத்தில் (சுத்தமாகப் பொருந்தாத ஒரு சூழ்நிலையில் :) ) பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் மின்மினி, சுனந்தா இணைந்து பாடி மிகப் பிரபலமான அந்தப் பாடல் இங்கே:

  • கடந்த ஜூலை மாதத்தில் திருக்குற்றாலக் குறவஞ்சியின் இன்னொரு பாடல் #365paa வரிசையில் பிரசுரமானபோது (http://365paa.wordpress.com/2011/07/11/006/) இந்தப் பாடலைக் குறிப்பிட்டுக் கேட்டவர் நண்பர் சுப. இராமனாதன். அவருக்கு நன்றிகள்!
064/365
Posted in குறவஞ்சி, சினிமா, திருக்குற்றாலக் குறவஞ்சி, நண்பர் விருப்பம், வர்ணனை, Uncategorized | 18 Comments

மயக்குறு மக்கள்

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
நூல்: புறநானூறு (#188)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
சூழல்: பொதுவியல் திணை – பொருண்மொழிக் காஞ்சித் துறை (விளக்கம் ‘துக்கடா’வில்)
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
ஒரு பெரிய பணக்காரர். தன் வீட்டில் பல்வேறு பண்டங்களைச் சமைக்கிறார், பலரோடு உட்கார்ந்து பிரமாதமான அறுசுவை உணவைச் சாப்பிடுகிறார். ஆனாலும், அந்த விருந்தை முழுமையடையச் செய்வதற்கு, ஒரு குழந்தை வேண்டும்.
அந்தக் குழந்தை விருந்தினர்கள் நடுவே குறுகுறுவென்று நடந்து செல்கிறது, தன்னுடைய சிறிய கைகளை நீட்டி நெய் சாதத்தைக் கலக்கி எதையோ தேடுகிறது, பின்னர் அதே கையால் தந்தை, தாயைக் கட்டிக்கொள்கிறது, கொஞ்சம் சாதத்தைத் தன் வாயில் இடுகிறது, மிச்சமெல்லாம் சுற்றிலும் சிதறுகிறது!
இதையெல்லாம் பார்க்கும்போது, ‘அச்சச்சோ, சாப்பாடு வீணாகிறதே’ என்று எந்தப் பெற்றோரும் நினைக்கமாட்டார்கள். பிள்ளையின் குறும்பை நினைத்து மயங்குவார்கள். அப்படிப்பட்ட மக்கள்செல்வம் இல்லாவிட்டால், வாழ்ந்து என்ன பலன்?
(பின்குறிப்பு: கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடை எப்பேர்ப்பட்ட ஏழை என்று இதுபோன்ற பாடல்களை ‘விளக்க’ முற்படும்போதுதான் புரிகிறது :) சிரமம் பார்க்காமல் மேலே உள்ள பாடலை இன்னொருமுறை படித்துவிடுங்கள்!)
துக்கடா:
  • ’பொதுவியல்’ என்றால், புறம் வகையைச் சேர்ந்த பாடல்கள் அனைத்துக்கும் பொதுவான விஷயங்களைச் சொல்லும் திணை
  • ’பொருண்மொழிக் காஞ்சி’ என்றால், நல்ல பண்புகளைச் சொல்லும் துறை

வணக்கம் ஐயா

தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,
தெளிவு குரு உருச் சிந்தித்தல்தானே!
நூல்: திருமந்திரம்
பாடியவர்: திருமூலர்
(படித்தவுடன் எளிதில் புரியும்விதமாக உள்ள இந்தப் பாடலுக்கு உரை ஏதும் தேவையில்லை. இருந்தாலும் ஒரு சாத்திரத்துக்காக இது:)
தெளிவு / அறிவு / ஞானம் என்பது, ஆசிரியரின் திருமேனியைத் தெய்வமாகக் காணுதல், அவருடைய திருப்பெயரைச் சொல்லிச் சொல்லிப் போற்றுதல், அவர் சொல்லும் திருவார்த்தைகளைக் கேட்டுப் பின்பற்றுதல், அவருடைய திருவுருவத்தை உள்ளே நினைத்து உருகுதல்!
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள், ஆனா ஆவன்னாமுதல் அத்தனையும் சொல்லித்தந்த குருநாதர்களுக்கு நன்றிகள்!

மாலைமாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
நூல்: தேவாரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்
சூழல் / சிறப்பு: இந்தப் பாடல் ‘மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வார்கள் – ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்தபின்னர் எந்தப் பக்கத்திலிருந்து (கடிகார, எதிர்க் கடிகாரச் சுழற்சியில்) பார்த்தாலும் அந்த மாலை ஒரேமாதிரி இருக்குமல்லவா? அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.
மாலைமாற்று வகைப் பாடல்கள் மற்ற பழந்தமிழ்ப் பாக்களைவிடக் கொஞ்சம் கடினமாகத் தோன்றுவது உண்மைதான் (இது தமிழ்தானா என்றுகூடப் பலருக்குச் சந்தேகம் வரும்) – ஆனால் பிரித்துப் படித்தால் ’அட, இவ்ளோதானா?’ என்று ஏதோ மர்ம முடிச்சு அவிழ்ந்ததுபோல் ஆனந்தம் பிறப்பது நிச்சயம். இப்படி ஒன்று இரண்டு அல்ல, பல பாடல்களைப் பாடியிருக்கிறார் திருஞானசம்பந்தர். அந்தத் தொகுப்பை இங்கே படிக்கலாம் - http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
முதலில், இந்தப் பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை:
யாம் ஆமா? (நாங்கள் கடவுள்களா? இல்லை)
நீ ஆம் ஆம்! (நீமட்டும்தான் கடவுள், ஆமாம்!)
மா யாழீ, (பெரிய யாழை ஏந்தியவனே)
காமா, (எல்லோராலும் விரும்பப்படுகிறவனே)
காண் நாகா, (நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே)
காணா காமா, (காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே)
காழீயா, (சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே)
மா மாயா, (பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே)
நீ மா மாயா (எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!)
ஆக, இந்தப் பாடலின் பொருள்:
நாங்கள் கடவுள்களா? இல்லை. நீமட்டும்தான் கடவுள், ஆமாம்!
பெரிய யாழை ஏந்தியவனே, எல்லோராலும் விரும்பப்படுகிறவனே, நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே, காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே, சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே, பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே, எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!
துக்கடா:
  • இந்தப் பாடலை இசை வடிவத்தில் கேட்க –> http://www.youtube.com/watch?v=JxLWNmZ2b_4
  • ட்விட்டரில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு #365பா-வில் சேர்க்கச் சொன்னது என் நண்பர்கள் கண்ணபிரான் ரவிசங்கர் மற்றும் செந்தில்குமார் ( http://twitter.com/#!/SeSenthilkumar/status/91512812031062016 )  அவர்கள் இருவருக்கும் என் நன்றி
  • மாலைமாற்றுபற்றிய சுவையான கட்டுரை ஒன்று (விளக்கப் படத்துடன்) –> http://www.visvacomplex.com/MaalaiMaaRRu1.html

                                  நன்றி - என்.சொக்கன் அவர்கள் - http://365paa.wordpress.com
kurinji pookkal
திருவாசகப் பாடலை இளையராஜா இசையில், குரலில் கேட்க