சனி, 17 செப்டம்பர், 2016

யாருடா அந்த பொண்ணு

வேலை முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது காதில் விழுந்த வாசகம் "யாருடா அந்த பொண்ணு". கேட்டதும் பகீர் என்றது. "அட காலக் கொடுமையே! இந்த சின்னப் பையன் கூட இந்தக் கூத்து அடிக்கிறானே என நினைத்துக் கொண்டு என் வீட்டு வாயிலில் நின்ற வண்ணம் நாலு அடியில் எட்டும் தூரத்தில் உள்ள சாய்ராம் வீட்டின் உள்ளே நடைபெறுவதை கண்ணுற்றேன்.
சாய்ராம் அவன் அம்மா கேட்பதற்கு எந்த பதிலும் கூறாமல் தலை குனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். அம்மா திரும்பத் திரும்பக் கேட்டும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. இஃது இன்னும் தொடர்ந்தால் பையன் அடி வாங்க நேரிடும் என்பது உரைத்ததனால் நான் இடைமறித்தேன்
      "என்ன சாய்ராம் அம்மா! என்ன நடந்தது?", கேள்வி விசாரிப்பதற்காக என்றாலும் மனது சுவாரசியமான தகவல் ஒன்றிற்கு  அலைந்தது.அலைந்தது.

 "அஃது ஒன்றும் இல்லைங்க! இவங்க மிஸ்-க்கு போன் போட்டேன். அப்ப அவங்க சொன்ன தகவல்தான் என் மனத்தைக் கஷ்டப் படுத்துகிறது"

" என்ன சொன்னாங்க" - ஆவலுடன் நான் கேட்டேன்.

"இரண்டு நாளாக கிரேயான் பென்சில் எதுவும் பத்திரமாகக் கொண்டு வர மாட்டேன் என்கிறான். அதனால் அவங்க மிஸ்க்கு போன் போட்டுக் கேட்டேன். அப்போ அவங்க கிளாஸ் பொண்ணோட கிரேயான் இவன் எடுத்து வந்து விட்டதா அந்த பொண்ணோட அம்மா புகார் செய்ததாகக் கூறினார்கள். அந்த பொண்ணு பேரைச் சொன்னார்கள். அதை மறந்து விட்டேன். அதான் கேட்டேன். ஒன்றும் சொல்ல மாட்டேங்கறான். கேட்டதும் சப்பென்றாகி விட்டது. ச்சே! இவ்வளவுதானா இதற்குத் தானா இவ்வளவு Build Up!.
இருந்தாலும் வந்த வேலையைப் பக்காவாக முடிக்க வேண்டும்  இல்லையா. அதனால் கேட்டேன், "அப்புறம் மிஸ் என்ன சொன்னாங்க!"
"இது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் சகஜம். பொருட்களை பத்திரமாக திரும்ப எடுத்துச் செல்லும் பக்குவம் அவர்களுக்குக் கிடையாது. நிறைய பிள்ளைகள் பொருட்களை இங்கேயே விட்டுச் சென்று விடுகிறார்கள் என அவங்க பதில் சொல்லி விட்டார்களாம். சொன்னதோடு விடாமல் எதற்கும் கேட்போமே என இருவரையும் விசாரித்தேன். இரு குழந்தைகளுமே திரு திருவென விழித்தார்கள் - என்று சொன்னாங்க. இவன் பொருள் இல்லை என நான் போன் போட்டுக் கேட்டால் அவர்கள் வேற புகார் வைக்கிறார்கள். கேட்டது நல்லதாய் போச்சு!". 
"சரிங்க. அதான் மிஸ் சொல்லிட்டாங்க இல்ல. திரும்ப திரும்பத் விசாரிக்கிறது அவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது போல! விட்டுடுங்க" - எங்க கூறியவாறு என் வீட்டினுள் நுழைந்தேன்.