புதன், 15 ஜூலை, 2015

கர்மவீரர் காமராஜர் மண்ணில் உதித்த தினம் இன்று!

தாத்தாக் கைப் பிடித்து வாக்கிங் போகவும், போகும் வழியில் அவர் அனுபவங்களைக் கேட்கவும், அவருக்குச்  சலிப்பு வந்தாலும் சளைக்காமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலடையவும், பாட்டியின் அணைப்பில் பல கதைகள் கேட்டு வாழ்வின் நிதர்சனத்தை உணரவும் கொடுப்பினை வேண்டும். அக்கொடுப்பினை ஏனோ எனக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் வாய்க்கவில்லை. அதனால் அம்மாவிடம் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவள் சொல்வதுண்டு, "எங்க அப்பா ரொம்ப  ரொம்ப ரொம்ப ... நல்லவர். நம்ம காமராஜர் மாதிரி", என்று. அதனால் தானோ என்னவோ எனக்குக் காமராஜர் மீது மிகப் பெரிய ஈர்ப்பு. "கிராமத்தில் தற்போது எங்கள் பெயரில் இருக்கும் வீடு காமராஜர் அருளியது. ஒரு சமயம் எங்கள் ஊர் தீ விபத்துக்கு (1950 -60) உள்ளான போது வசித்த வீடுகள் எல்லாம் விபத்தில் நாசமாகியது. அது சமயம் புணர் வாழ்விற்காக எம் ஊர் மக்களுக்கு வீடு கட்டி அவ்வீ டுகளுக்கு மக்களை உரிமை தாரர்கள் ஆக்கினார்  காமராஜர்", என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். விளம்பரம் எதுவும் தேடிக்காத வியத்தகு மனிதர். நல்லவராகவே வாழ நாம் விரும்பினாலும் மாய உலகம் நம்மில் பல சபலங்களை உற்பத்தி செய்து விடுகிறது. அவற்றை எல்லாம் கடந்து நல்லவராய் பிறரை வாழ்விப்பதில் வல்லவராய், சபலங்களுக்கு ஆட்படாமல் வாழ்ந்ததாலேயே  அவர் கர்ம வீரர்! அவருக்கு என் கவிதாஞ்சலி! 
உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!