திங்கள், 2 ஜூன், 2014

ச்சீ ! ச்சீ இந்த பழம் புளிக்கும்.

ச்சீ ! ச்சீ இந்தப் பழம்  புளிக்கும்.
           சிறு குழந்தையின் அழகிய கருவிழி போல கரு கருவென பளபளத்தது பன்னீர் திராட்சை. என் அக்கா மகன் சாய்ராம் சிறு சிறு கொத்துக்களை ஆர்வமாக எடுத்து ஒன்றொன்றாக உண்ட அழகை பார்த்த போது நரி கதை சொல்லி நீதி போதிக்க ஆர்வம் வந்தது.(டீச்சர் புத்தி போகலை) அவனை அருகிலே அழைத்து கூற ஆரம்பித்தேன்.அவனும் உம் கொட்ட ஆரம்பித்தான்.
                 "ஒரு ஊர்ல (காட்டிலே) நரி  ஒன்னு இருந்ததாம். ஒருநாள் அது ஊர்  சுத்திட்டு வரப்ப அதுக்கு ரொம்பப் பசிச்சதாம்."
            "அப்படியா- அது ஏன் ஊர் சுத்தணும். வீட்லயே இருக்க வேண்டியதுதானே "
                     " இல்லப்பா அதுக்கு வீடே அந்த காடுதான். அப்புறம் சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமான்னு தேடித்தாம். "
                      "ஏதாவது கிடைத்ததா, சித்தி"  
                        "அப்போ பக்கத்துல ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்ததாம். அதுல திராட்சை கொத்து கொத்தாக காய்த்துத் தொங்கியதாம்."
                         "இந்த திராட்சைக் கொத்து மாதிரியா"
                             " ஆமாண்டா செல்லம். ஆனா அது உயரத்துல இருந்ததாம். அதை எட்டி எட்டி பறிக்க முயன்றதாம்."
                            "உடனே ஒரு ஏணி எடுத்து வந்து பறித்து சாப்பிட்டதாம்" - சாய்ராம் இப்படிச் சொன்னவுடனே பக்கென்றது. பின்னே கிளைமாக்சை இப்படி மாற்றி விடுவான் என்று நான் அறியவில்லை. ஆனாலும் நான் போதிக்க வந்த கருத்தை போதிக்காமல் விடுவதில்லை என முடிவு செய்து கதையைத் தொடர்ந்தேன்.
                                   "இல்லப்பா அங்கே ஏணி எதுவும் இல்லையாம்"
                                     " ஓ அப்பிடியா! அப்போ அங்கே பக்கத்துல இருந்த வீட்டில இருந்து ஏணி எடுத்து வந்து பறிச்சுருக்கும்"  - கோபம் கோபமாக வந்தது. இருப்பினும் என் மறுதலிப்பைத் தொடர்ந்தேன்.
                                " இல்லப்பா அதுதான் காடாச்சே!"
                                  " அப்பன்னா வீடு எங்கே இருக்குன்னு தேடிப் பாத்து ஏணி வாங்கி வந்து பழம் பறிச்சு சாப்பிட்டிருக்கும்" - ( அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!) இருந்தாலும் எப்படியாவது என் கதையை சொல்லியே தீருவது என முடிவெடுத்தேன்.
                              "வீட்டுக் கிட்ட போனா நரியை அடித்துத் தொரத்திடுவாங்களே! அதான் அங்கேயும் போகலே"
                                 "அப்போ அந்த நரி சின்ன செடி எங்கே இருக்குன்னு பாத்து அதுல இருக்க திராட்சியை பறித்து சப்பிட்டுச்சாம்"
                                        குழந்தைகளின் நேர்மறை எண்ணம் மட்டும் எனக்குப் புரிந்தது. இனி இவனிடம் பேசிப் பயனில்லை என உணர்ந்த நான் "ச்சீ ! ச்சீ இந்தக் கதை புளிக்கிறது " என  மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் .

என்னே ஒரு கிளைமாக்ஸ். "Younger  generation is  so smarter "