வியாழன், 8 மே, 2014

நேரில் வந்த தெய்வம் - சிறுகதை

                                 நேரில் வந்த தெய்வம் - சிறுகதை

           "சிங்கம் என்றால் என் தந்தை தான்"- எவ்வளவு சரியான வார்த்தைகள். ஊருக்குக் கோமாளியாக இருந்தாலும் பெண்ணுக்கு அப்பாவாயிற்றே!. ஆனால் ஸ்ரீயின் அப்பா ஒரு ரியல் ஹீரோ. படிப்பிலும், அந்தஸ்திலும், குணத்திலும் ஒரு முன்மாதிரி மனிதராகவே வாழ்ந்திருக்கிறார்.  நிலவிலும் கறை வருவது போல அவருக்கும் குடிப்பழக்கம் என்ற ஒன்று நண்பனாக அறிமுகமாகி, விருந்தாளி போல் வாழ்வில் நுழைந்து மனைவி போல் கூடவே வாழ்ந்தது.  மனைவி, மக்களைக் கூட மாற்றானாக்கியது. 
              ஸ்ரீக்கு இன்று நினைத்தாலும் குடிப்பழக்கமில்லாத அப்பாவுடன் வாழ்ந்த வசந்த கால நினைவலைகள் மிகு பெரும் சந்தோஷத்தை அள்ளித் தரும். பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும் பிள்ளைகளின் சந்தோஷத்தில் ஒரு புள்ளி கூட விழுந்ததில்லை. அப்பா அப்பாதான். ம்ஹும்! யார் கண் பட்டதோ!
                     2009 ஜூலை மாதத்தில் அப்பா  ஒரு நாள் மயங்கி விழுந்தார். ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட அவரை ஸ்ரீயின் சகோதரர்கள் தான் கவனித்துக் கொண்டனர். ICU என்பதால் ஒருவருக்கு மேல் அனுமதி இல்லை. அண்ணன், தம்பி இருவரும் மாறி மாறி கவனித்துக் கொண்டனர். மருத்துவர்கள் லிவர் டேமேஜ் ஆகி விட்டதாகவும் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  புதுப்புது பெயர்களில் ஏதேதோ கூறினார்கள். பிழைப்பது அரிது எனவும் கூறினர். அதனை சகோதரன் மூலம் அறிந்த போது பயத்தில் எங்களுக்கு ஒன்றும் இயலவில்லை.
                         "எந்த நேரமும் அப்பாவின் கதை முடியலாம் - மனதை திடப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" - அண்ணன்.
                      ஏனோ அண்ணன் பெரிய எதிரி போலத் தெரிந்தான். ஆனாலும்  அது தானே நிதர்சனம்.
                     இன்று மாலை அம்மா, அக்கா, தங்கை எல்லோரும் கடைசியாக உயிருடன் உள்ள அப்பாவைக்  காணச் செல்லுகின்றனர். கூடவே ஸ்ரீயும். தன் மானசீக தெய்வம் சாய் பாபாவை மனதில் நினைந்த வண்ணம் சென்றாள். எப்போதும் போல் சாய் பாபா ஏதேனும் வாகனத்தில் தரிசனம் தருவாரா என ஏங்கி சாலையில் சென்ற வாகனமெங்கும் தேடினாள். அன்று பார்த்து பாபா மிகவும் சோதித்தார். அழுகையாக வந்தது.
                  "சாய்பாபா நீ அப்பா கிட்ட இருக்கிற அறிகுறியை எனக்குக் காட்ட வேண்டும். நீயன்றி என் தந்தையைக் காக்கும் மருத்துவர் வேறு யாரும் இல்லை. அப்பாவிடம் உன் பிரசன்னம் நான் அறிய நேர்ந்தால் அப்பா நிச்சயம் பிழைத்து விடுவார். பிளீஸ் பயம் நீக்கி நம்பிக்கை தாருங்கள்" - மனதில் சாயுடன் ஸ்ரீ உரையாடிய வண்ணம் பயணித்தாள். ஹாஸ்பிடல் வாசலில் இறங்கிய போது கால்களின் கீழ் பூமி இல்லாதது போன்றே இருந்தது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்தாள். கண்கள் சாயி ஏதேனும் படமாகவோ சுருவமாகவோ தெரிவார் எனத் தேடியது. எதுவும் படவில்லை. எந்நேரமும் நீரை உதிர்க்கக் கண்கள் தயாராக இருந்தது. அழுவது அவள் இயல்பில்லை. ஆனாலும் கண்ணீர் முட்டியது. வார்டை நோக்கி நடக்க நடக்க நெஞ்சு தட தட என அதிர்ந்தது. ICU-வில் அப்பா போன்றே இன்னும் மூவர் சிறிது கோமாவில் இருந்தனர். அப்பவோ கிழிந்த பாயைப் போல் துவண்டிருந்தார்.
                   அரைகுறையாக நாங்கள் வந்ததை அப்பா உணர்ந்தார். ஆயினும் பேச இயலவில்லை. அம்மா அப்பா காதருகில் என்னென்னமோ பேசினார். அழுதார்.  அப்பாவைப்  பார்க்கும் சக்தியின்றி ஓரமாகவே நின்றாள் ஸ்ரீ. மனம் மீண்டும்  மீண்டும்  பிரேயர் செய்தது.
                  "ஆரத்தி சாய் பாபா சௌக்ய தாதார ஜீவா " . . . பாபா prayer பாடல் ஒலித்தது.
                 தன் காதுகளையே ஸ்ரீயால் நம்ப இயலவில்லை. தயாராக இருந்த கண்களின் நீர் உடைத்துக் கொண்டு வழிந்தது.
                  "அழாதேம்மா ! கடவுள் காப்பாத்துவார்" - பக்கத்து பெட் அட்டெண்டர்.
                  அவருக்கு என்ன தெரியும். ஸ்ரீ அழுவது பயத்தில் அல்ல , நன்றியால்  ஆனந்தத்தால், அப்பாவிற்குக் கிடைத்த கடவுள் அருகாமையால், மீண்டும் அப்பா எழுந்து வீட்டிற்கு வருவார் என்ற நம்பிக்கையால் என்று.
                 இப்போது ஸ்ரீ பாட்டு எங்கிருந்து வந்தது எனக் காணத் தலைப்பட்டாள்.  சாயி பக்தரான பக்கத்து பெட் நோயாளியைக் கோமாவில் இருந்து மீட்க அவர் காதருகில் இசைக்கப்பட்டது.எனப் புரிந்து கொண்டாள்.
              அவர் பெயரைக் கேட்ட ஸ்ரீ ஆடித்தான் போனாள்.அப்பெயர் "சாய்பாபா"