வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தன் தாயின் மேல் கொண்ட மீதூறிய அன்பினால் என் வகுப்பு மாணவன் - சுதன் . வேல் எழுதிய கவிதை

ஒரு மகன் நான் கருவில் வளர தன்
தாலியையே இறைக்குப் பிச்சை போட்டவளே!

வயிறு கிழித்து வலி தந்தேன்! அழ மறுத்தேன்!
மருத்துவச்சி கண் கலங்க நெஞ்சடைக்க அழுத்தவளே!

உயிர் பிழைத்தேன்! உனைத்தேடி குரலினேன் பச்சிளமாய்!
கடவுளோசை கேட்டது போல் மனம் குளிர மயங்கியவளே!

தட்டிலிருந்த உணவு அமுது போல் இல்லையடி!
காரணம் உன் உமிழ் நீர் அதிலில்லை என்னமுதவளே!

திறமைப்பால் ஊட்டி மேடைப் படியேறி புகழ் பறக்க
வீட்டுப் படியேறி கால்பதிய பூவிற்ற புனிதவளே!

உழைத்து உழைத்து உடல் ஒடுங்கத் தேய்ந்து
வளர்பிறையாய் எனை வளர்த்த வலியறியா வானவளே!

அழகூட்டா உலகழகியானாய் எந்தன் விழியுள்!
நான் ரசித்த முதல் பெண்ணும் நீயே முருகியவளே!

அறிவு பெற்று படிக்க வைக்க கழுத்தில் நகையிறக்கி
பதக்கம் என் கழுத்தில் ஏற வைத்த கனியவளே!

திருவிழாப் போல் என் திருமணம் நிகழ உனக்காசை
மரணமில்லாமல் நாம் அன்பில் வாழ வரம் கொடு என் மங்கவரமே....

                       -   சுதன் . வேல்

தன் தாயின் மேல் கொண்ட மீதூறிய அன்பினால் என் வகுப்பு மாணவன்   -   சுதன் . வேல் எழுதிய கவிதை இது. மிக நன்று. அன்னையின் அன்பினால் எதையும் சாதிப்பான் என்ற நம்பிக்கையுடன் கடவுளாசி யாசித்து , வாழ்வில் முதல் நிலைக்கு வளர வாழ்த்துகிறேன்!