ஞாயிறு, 15 ஜூன், 2014

தந்தைக்கு நன்றி

                    கண்ணில் புலப்படவில்லை எனினும் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தன் முத்திரையை ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் தந்தை அமரர் மு.அருணாசலம் அவர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
                   என் பதினொன்றாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய போது படிக்க சிரமப்பட்ட என்னை ஹாஸ்டலுக்கு வரும் போதெல்லாம் படிப்பித்துக் கொடுத்த தந்தைக்கு நன்றி.
                   என் முதல் வகுப்புப் பள்ளியிலிருந்து மாற்றலாகி வரும் போது என்னைப் பாராட்டி நல்ல பள்ளிகளில் நல்ல நல்ல கல்வியை நான் விரும்பும் படி எல்லாம் படிக்க வையுங்கள் என்று கூறிய பள்ளித் தலைமையாசிரியரின் விருப்பப் படி எனக்கு மேம்பட்ட கல்வி வாய்ப்புகளைத் தந்த தந்தைக்கு நன்றி,
                   மகளென்றாலும் மரியாதையைக் கெடுக்காத, மதிப்பு மிக ஆசிரியையாக என்னை உருக் கொடுத்த  தந்தைக்கு நன்றி,
                   தன்னம்பிக்கை தந்து துன்பக் கடலில் துவண்டாலும் வழி தவறாமல் வாழும் நெறிப்படுத்திய  தந்தைக்கு நன்றி,
                  முதலில் கை பிடித்து நடை பழக்கியும், பின்பு கைவிட்டு நடக்க மேற்பார்வையிட்டு நடை தவ(ள)றும் போது கை தூக்கியும் , என்றும் விடாது கடவுள் போல் கண்ணுக்குப் புலப்படாது கை கொடுத்து வரும் எங்களது ஆருயிர்  தந்தைக்கு நன்றி,
                   வாழும் முறைமையை நேரடியாகவும் , வாழக்கூடாத முறைமையை மறைமுகமாகவும்  படிப்பித்த  எங்களது ஆருயிர்  தந்தைக்கு நன்றி,
                 

நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
   மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
    அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
    மனதிற்கு ஓர்  ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
    அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.


மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாமல் வாழ்கின்ற  தந்தைக்கு நன்றி,

from

சின்ன வயசுல
அப்பாவோட கைய பிடிச்சிக்கிட்டு
ஒரு துணிக்கடைக்கு போன
ஞாபகம் இருக்கு..

அப்பாகிட்ட
காசு கம்மியாதான்
இருக்கும்னு தெரிஞ்சும்
விலை அதிகமா உள்ள
ரெடிமேட் சட்டைதான்
வேணும்னு
அடம்பிடிச்சி வாங்குனது
இன்னும் என் கண்ணுல நிக்குது..

அந்த தீபாவளிக்கு
அப்பா தனக்குனு
ஒரு வேட்டி கூட எடுத்துக்கல..
இதுவும் நல்லா நெனைப்பிருக்கு..

இன்னைக்கு
அதே துணிக்கடைக்கு
அப்பாவோட போனேன்..

விலை அதிகமா உள்ள
ரெடிமேட் சட்டை
அப்பாவுக்கு
எடுத்துபோட சொன்னேன்..

உடனே அப்பா,
"ஏன்டா அவ்ளோ விலையில..
எனக்கு அதெல்லாம் வேணாம்டா..
உனக்குதான்டா சரிப்பட்டுவரும்..
எனக்கு கம்மி ரேட்லயே வாங்குடா.."

அம்மா மட்டும் தெய்வமில்லை..
அப்பாவுந்தான்..