செவ்வாய், 3 ஜூன், 2014

முதல் அனுபவம்


              இன்று பள்ளி முதல் நாள். லீவுக்குப் பிறகு பள்ளி செல்வது சுவாரசியமாக உள்ளது. நட்பு வட்டத்தையும், அதட்டி அரவணைக்கும் ஆசிரியக் கூட்டத்தையும் காணும் ஆர்வம் மிகைப்பட்டது. ஸ்கூல் பஸ் வரும் ஹாரன் சௌண்டு கேட்டது. பஸ் மேல மேடு போய் திரும்பிவருவதற்கு எப்படியும் பத்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் பஸ் ஸ்டாப்க்கு ஓட வேண்டும். அரைகுறையாக பின்னப்பட்ட இரட்டை சடைகளை தொங்கவிட்டுக்கொண்டு பைக்குள் கருப்பு ரிப்பன்களை  நுழைத்துக் கொண்டு அவசரமாக  பஸ் ஸ்டாப் நோக்கி ஒடினாள் விஜி. ஓட ஓட பஸ் அருகில் வரும் சத்தம் கேட்டது. சில சமயங்களில் பஸ் கடந்து போய்விடுவதுண்டு. பல நேரங்களில் டிரைவர் அவள்  பக்கம் பார்த்து அடையாளம் கண்டு விட்டால் சில நிமிடங்கள் வைட் செய்வார். இன்று எப்படியோ?! 
                விஜி படிப்பதென்னவோ அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. 4 கிலோ மீட்டர் கடந்து பயணிக்கவேண்டிய பெண் பிள்ளைகளின் நலன் கருதி அரசாங்கம் காலையிலும் மாலையிலும் பயணிக்க மாணவிகளுக்காகவே பிரத்தியேகமான சலுகை வழங்கியிருக்கிறது (மகளிர் மட்டும்/ மாணவியர் மட்டும்).                         எட்டாவது வரை அருகிலிருந்த உயர்நிலைப்பள்ளியில் படித்த விஜிக்கு தன் அக்காவைப் போன்று பஸ்ஸில் சென்று படிக்கும் அனுபவத்தைப் பெற ஆசை. அப்பாவும் அவள் ஆசைக்கு தடை விதிக்கவில்லை. அக்கா ஆங்கில வழியில் படிக்கிறாள். விஜி தமிழ் மீடியம் என்றாலும் அப்பாவின் வழி காட்டுதலில் அக்காவிற்கு இணையாக ஆங்கிலத்தில் சக்கை போடு போடுவாள். ஆமாம் அப்பா பி.எஸ்.சி  மற்றும் பாலிடெக்னிக் படித்தவர். மேற்கொண்டு படிக்க வசதியும், இல்லற வாழ்வும் இடம் தரவில்லை. இருந்தும் பி.எஸ்.சி படிப்பை கல்யாணத்திற்குப் பிறகு அம்மாவோட உதவியால்தான் படித்தார். உதவின்னா ஹோம்வொர்க் ரெகார்ட் வொர்க் இதெல்லாம் தான். அப்பா நைட் ஷிப்ட் டூட்டி பார்த்து பகலில் கல்லூரிக்குச் செல்வது என இரட்டைக் குதிரையில் லாவகமாகவே பயணம் செய்தவர். அப்பா கல்லூரி படிக்கும் கால கட்டத்திலேயே சுஜி, விஜி என்ற கட்டித் தங்கங்களை வெட்டுப்படாமல் சுகமாகத் தந்தாள் அம்மா.
                                    எப்படியோ பஸ் வரவும் விஜி பஸ் ஸ்டாப் வரவும் சரியாக இருந்தது. அவள் அக்காவோ ரொம்ப பெர்பெக்ட் நேரம் தவறாதவள். முன்னாடியே பஸ் ஸ்டாப் வந்து விட்டாள்.
                                     விஜி எப்பொழுதும் டிரைவருக்குப் பின் இரண்டாவது இருக்கையில் அமருவதுதான் வாடிக்கை. அதேபோல் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு இருக்கையை வழக்கப்படுத்தியிருந்தார்கள். மறந்தும் கூட அடுத்தவர் இருக்கையில் அமர்வதில்லை. அப்படி அமர்ந்து விட்டாலோ பஸ் முழுக்க ஒரே களேபரம் தான். எனவே பொது நலன் கருதி இடம் மாறிக்கொள்வதில்லை. மாறினாலும் நட்புக்குள் மட்டுமே நடக்கும்.
                                         ஆலடி பஸ் ஸ்டாப் வந்தவுடன் பஸ் நின்றது. பல மாணவிகளுடன் உமாவும் ஏறினாள். வழக்கம் போல எனது முன் இருக்கையில் அமர்ந்தாள். விஜிக்கு ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கும். அடுத்து கடக்க இருக்கும் ஃபாத்திமா கான்வென்ட் அவளது விருப்பத்திற்கு உகந்த ஒரு இடம்.
                                                 அப்பள்ளியுள் மாணவர்கள் காலைக் கூட்டம் முடித்து வகுப்புகளுக்கு சீராக வரிசையில் செல்லும் அழகு கண்ணுக்குப் புலப்படும்.  பார்த்த மாத்திரத்தில் இப்பள்ளியுள் நமக்கு ஒரு இடமில்லையே என ஏங்கத் தொடங்கும். நாமும் ஆங்கில வழியில் படித்திருக்கலாமோ என மனம் அசை போடும். தற்போது படிக்கும் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து இதே கதைதான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காட்சி கண்ணில் புலப்படும். அம்மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் அழகும், பள்ளி மேடையில் செய்து காட்டும் பல்வேறு நிகழ்வுகளும் அவளுக்குள் பலவித எண்ன மாறுதல்களை ஏற்படுத்தி ஊள்ளது. மேலும் அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களில்  சிலர் அங்கு படிக்கிறார்கள். அவர்கள் கூறும் பல விஷயங்கள் மிகையான வியப்பினை தரும்.
                                    அதற்காக விஜி தன் பள்ளியை தரக்குறைவாக நினைக்கவில்லை அவளுடைய மானசீக குரு சுசீலா டீச்சர் அங்கு தானே இருக்கிறார்கள்.
                                           இவ்வாறாக வியப்பும் தன் படிப்பில் அக்கறையுமாக பள்ளிப்படிப்பையும் கல்லூரிப்படிப்பையும் முடித்தாள். இதோ அவளது விருப்பத்திற்கு உகந்த ஃபாத்திமா கான்வென்டுக்குள் கணிணி ஆசிரியப் பணியிட இண்டெர்வியூக்கு(நேர்முகத் தேர்வு) அப்பாவுடன்  போய்க்கொண்டிருக்கிறாள்.  உள்ளுர பயமும் ஆர்வமும் மிகுந்திருந்தது அதை வெளிக் காட்டாமல் சதாரணமாக அமரச் சொன்ன இடத்தில் அமர்ந்தாள்  அவள்  முறை வந்த போது உள் அழைக்கப்பட்டாள். அப்பாவும் உடன் நுழைந்தார்.
                                      அங்கு வெள்ளை உடை அணிந்த கன்னிகாஸ்திரி அமர்ந்திருந்தார். Sr.நிர்மலா என்ற பெயர் பலகை அவரது பெயரை தெரியப் படுத்தியது. அவரது பார்வை தெளிவு மிகுந்திருந்தது. அதனால் மரியாதை அவளையறியாமல் மனதை நிரப்பியது.
                                                    வழக்கமான தகுதி பற்றிய விசாரிப்புகள் நடந்தேறின. பிறகு தம் பள்ளி இந்த வருடம் தான்  மேல்நிலைப் பள்ளி தரத்திற்கு உயர்த்தப்பட்டதாகக் கூறினார். அனைத்தும் ஆங்கிலத்திலேயே உரைத்தார். விஜிக்கோ புரிந்தது. மேலும் பள்ளிக்குள் பாடம் நடத்துவதும, உரையாடுவது என அனைத்தும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்றார். வயிற்றில் ஏனோ புளி கரைத்தது. விஜி தன்னம்பிக்கையில் ஆங்கிலத்தில் ஒருவாறாக பேசிச் சமாளித்தாள். அப்பா இடை இடையே சில விசயங்களை ஆங்கிலத்திலேயே அழகாகப் பேசியதும்  மிகுந்த தெம்பை அளித்தது. முடிவை பின்பு தெரியப்படுத்துவதாகக் கூறி தேர்வை நிறைவு செய்தார்.
                                                   அப்பாவுடன் வீடு திரும்பிய விஜிக்கு இருப்புக் கொள்ளவில்லை. முடிவை தபாலில் எதிர் பார்த்தாள். போஸ்ட் மேனும் வந்து சென்று விட்டார். இன்றைய பொழுதும் ஏமாற்றமே மிஞ்சியது. தன்னை விட நல்ல ஆசிரியர் கிடைத்திருப்பார் என எண்ணிக் கொண்டாள் விஜி.
                                                      மாலை ஒரு ஆறு மணி இருக்கும், பெரிய மீசையுடன் ஒரு மனிதர் வாசல் கதவைத் தட்டினார். வாசலுக்கு வந்து பார்த்த விஜியிடம் நாளை பள்ளிக்கு பணியில் வந்து சேருமாறு சிஸ்டர் நிர்மலா சொல்லியனுப்பியதாகக் கூறினார். அவர் அப்பள்ளியின் வாட்ச் மேன்.
                                                         பல வண்ண பட்டாம் பூச்சிகள் பறந்த மனதுக்குள் இறைவா நன்றி  என்ற விஜி நாளை பள்ளி வந்து சேருவதாகக் கூறி அனுப்பினாள்.
                                               ஒரு பொருளைக்  குறித்து தீவிரமாக எண்ணும் போது அப்பொருள்  எப்படியும் வசப்படும் என்ற எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தக வரிகள் எவ்வளவு உண்மை. நினைத்தால் புல்லரிக்கிறது. தான் வியந்து பார்த்த பள்ளிக்குள் தனக்கு வேலை கிடைத்தது ஆனந்தமாக இருந்தது.
                                                             விடிந்ததும் குளித்து முடித்து அக்கா உதவியுடன் சேலை அணிந்து, செவ்வனே பள்ளிக்குப் புறப்பட்டாள். இன்று பள்ளி முதல் நாள்.