ஞாயிறு, 3 மே, 2015

மூக்குத்தி பூ மேலே

                                    ரஞ்சிதாவிற்கு கனவு போலவே இப்போதும் இருக்கிறது.  நேற்று தனக்கு பள்ளி ஆண்டு விழா மேடையில் நல்லாசிரியர் விருது, நல்ல வகுப்பு விருது, அவள் பாடத்தில் நூறு சதவிகித தேர்ச்சி [மற்ற பாடங்களிலும் வாங்கியிருந்தார்கள்] என மூன்று வகைப்பாட்டில் பரிசு கிடைத்தது. ஆனந்தத்தை முந்திக் கொண்டு வந்தது அழுகை. அம்மா எங்கே? கண்கள் தேடின.      
              ரஞ்சிதா கண்ணாடி முன்னாடி தன் முகத்தைத் திரும்பத்  திரும்பப்  பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பதிலும் கவனமாக இருந்தாள். கண்ணாடி பார்ப்பது என்ன தேச விரோதமா? பயப்படுவதற்கு.  இல்லை தான்! என்றாலும் அவளின் வளர்ப்பு அப்படி. 
            ஆம்,  பள்ளிக் காலத்திலிருந்தே பருவ ஆவலில்  கண்ணாடியில் அடிக்கடி அழகு பார்த்த தன்னை, அம்மா நொடித்தே சாகடித்தது பசு மரத்தாணி போல பதிந்து விட்டது. இப்பொழுதும் அந்த உணர்வு வந்து தாக்காமல் இல்லை. அம்மா அழகானவள் அவளின் அன்பின் முன்னே புலியும் மண்டியிடும். அத்தகு அம்மா எதற்காக ஒரு கண்ணாடி பார்ப்பதை நொடித்தாள்? என்ற தன் நீண்ட நாள் விடை அறியாக் கேள்விக்கு விடை, அம்மா இறந்த இந்த பிரிவு நாட்களில் மனதுக்குத் தட்டுப்பட்டது. தான் புரியும் ஆசிரியத் தொழிலும் அதற்கு உறுதுணையாக இருந்தது எனலாம். 
                        மாணவர்களில் நல்ல தரத்தில் உயர்ந்து வரும் பலர் திடீரென்று படிப்பில் மந்த நிலைக்கு வந்து விடுகிறார்கள். ஆராய்ந்து பார்க்கும் போது அவர்களுள் பருவ மாற்றம், அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம், பாலினக் கவர்ச்சி எனப்  பல மற்றங்களை விடையாகக் காண முடிகிறது.  
                        அம்மா இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்த பலரும் கூறுகையில் அவளின் ஒழுக்கமான பிள்ளை வளர்ப்பை வியந்தனர். ரஞ்சிதாவிற்குத்  தன்னையும், உடன் பிறந்தோரையும், தன் அன்னையையும்     நினைத்துப் பூரிப்பாக  இருந்தது. 
                           அம்மாவின் அந்த நொடிப்புகளே இந்த நொடியின் தன் முன்னேற்றத்திற்குக் காரணம். அம்மா அப்படி இல்லாமல் இருந்திருந்தால் தனக்கும் பருவ மாற்றத்தின் போது அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம், பாலினக் கவர்ச்சி  என கவன சிதைவுகள் ஏற்பட்டிருக்கக் கூடும்.  "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமலும் கெடும்" - என்ற குறளும் ஞாபகத்திற்கு வந்தது.
                                         ரஞ்சிதா  இப்போது கண்ணாடி முன்னாடி தன் முகத்தில் தன் அன்னையைக் கண்டு கொண்டிருக்கிறாள். ஆம் அவள் மூக்கில் புதிதாக முளை விட்டிருக்கிறது ஒரு மூக்குத்தி. அவள் அம்மாவுடைய அந்த மூக்குத்தி அம்மாவுக்கு favorite. அம்மாவின் சுவாசத்தை சுகமாக அனுபவித்த அம்மூக்குத்தி அம்மாவின் பிரதி பிம்பம். காற்றிலே கலந்த அம்மாவின் சுவாசத்தைத் தேடினாள். கிடைத்ததோ அவள் சுவாசத்தின் வாசமான இந்த மூக்குத்திமட்டுமே. அதுவே தனக்கு மீதி வாழ்நாளின் ஆறுதல் மற்றும்  அம்மாவின் அரவணைப்பு. "மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுதடி!" - காதுகளில் ஒலித்த பாடல் ரஞ்சிதாவிற்கு "மூக்குத்தி பூ மேலே அம்மா  உட்கார்ந்து பேசுகிறாள்" என ஒலித்தது.


                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக