வியாழன், 29 செப்டம்பர், 2016

என் வகுப்பறையில் இன்றைய பதிவுகள் 28-09-2016

இன்று முதல் பருவத்தின் இறுதி நாள். மாணவர்கள் அடுத்து வரும் மூன்று நாட்களையாவது விடுப்புக் கொடுத்தார்களே என்ற ஆதங்க சந்தோஷத்துடன் இருந்தனர். இரண்டு நாட்களாகவே மாணவர்களிடம்,  12 அ , ஆ  பிரிவினர் கலக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்படவிருக்கிறார்கள் என்பது இலை மறை காயாகத்  தெரிவிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் அவர்கள் செய்முறை தேர்வு முடிந்து கணித வகுப்பிற்கு தயாராக இருந்த சமயம் நான் சென்று புது மாணவர் பட்டியலை வாசித்தேன். அது சமயம் மாணவர்களிடையே சிறு சல சலப்பு ஏற்பட்டது. அஃது அதிருப்தியா? அல்லது ஆதங்கமா? என அறியேன். ஆனால் எனக்கு மனது ஏனோ வலித்தது. மாணவர்கள் என்னமோ நம் கண் முன்னேதான் உலாவருவார்கள். ஆனாலும் ஏனோ பிரிவதாக மனம் வாடியது. புது மாணவர்களை நான் எப்படி வழி நடத்துவேன் என புரியவில்லை. கடவுள் தான் கை கொடுக்க வேண்டும். சுதன், சூர்யா, ஹரிஹரன் போன்றோர் ஷாகுல்-க்காகப் ( Today Shahul - absent)பேசினார்கள். ஷாகுல் ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இது தெரிந்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே உகந்த உபாயம் ஒன்று செய்ய வேண்டிக் கொண்டார்கள். நானும் முயற்சி செய்கிறேன் என்றிருக்கிறேன். ஆனால் மாணவர்களிடம் என் பாடத்தை Mr.D.K எடுப்பார் என சும்மா கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் மொழிப் பாடத்திற்குப் பிரிந்து செல்வது போல என் வகுப்பிற்கு வருவார்கள் என்பதை நான் கூறவில்லை. வரும் திங்கள் அன்று  அது அவர்களுக்கு ஆனந்தமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ  இருக்கக் கூடும்.

மாற்றங்கள் மாறாதது. முதல் சந்திப்பில் வேண்டாததாக இருக்கக் கூடும். காலப் போக்கில் பழகி விடும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக