புதன், 10 ஜூன், 2015

அம்மா வந்தாச்சு !

        சங்கீதாவிற்கு இன்று ஒரே அம்மா ஞாபகம்? நாளைக்கு அன்னையர் தினம். அம்மா கூட இருந்தால் நன்றாயிருக்கும்? நடக்குமா? நடக்குமென்றால் எப்படி? தெரியவில்லை.
       போன  வருடம் அம்மா கூட இருந்தது நினைவில் வந்து போனது. அம்மா அப்பிராணி போலத் தெரிவாள். ஆனால் அப்பிராணி   அல்லள். பேதை போலத் தெரிவாள் ஆனால் அவள் ஒரு  மேதை. அவள் சொல்லித்தந்த கதைகள் மனசுக்குள் காவியங்களாய் கல்லெழுத்துக்களாய் அழகிய ஓவியங்களாய் என்றுமே மறையாதவை. அவள் பாடிய பாடல்களை பி.சுசீலா வந்து பாடினாலும் மனது ஏற்காது. அம்மா வருவாளா? என் நைந்து போன உள்ளம் தைத்து வைக்க அவள் வருவாளா? அடிகொருதரம் கண்கள் ஏனோ அம்மாவைத் தேடியது. அம்மா வரணும் மனது வேண்டியது. அதற்காக வேலை செய்யாமலா இருக்க முடியும்?
         சிங்கில் அழுக்கு பாத்திரங்கள் காத்திருந்தது. அவற்றை ஆதரிக்கும் வண்ணம் விளக்கி அலசிக் வைத்தாள். "கண்ணு பாத்தா கை செய்யணும்" - அம்மா அடிக்கடி சொல்லும் வசனம். அது எவ்வளவு சரியான ஒன்று என்பதை சமீப காலமாக அதை உண்மை என்பதை சங்கீதா உணர்கிறாள். சின்னச் சின்னதாக பாத்திரங்கள் விழும் போதே செய்யணும் என நினைக்கிறாள். ஆனால் அதிகமாக பாத்திரம் சேர்ந்த பிறகே மிகவும் கஷ்டப் பட்டு செய்கிறாள். எடுக்கிற பொருள் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். சரியான படி இல்லாததை பார்க்க நேர்ந்தால் உடனே அதை சரியாக வைக்க வேண்டும். இப்படி அம்மாவோட வழி நடத்துதல்கள் எராளம். அம்மா வரணுமே என மனது மிக ஏங்கியது.
    தூங்கும் போது கூட ஆடை விலகாமல் ஒருக்களித்து அழகாகத் தூங்க வேண்டும். தூங்கினாலும் பெண்ணுக்குள் ஒரு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும்.  "அது அவளை இராவணன் கோட்டையிலும் சீதையாக்கும்" -என்பது அம்மா அபிப்ராயம். அப்படித்தான் அம்மா வளர்த்தாள். அப்படி வளர்ந்த காலத்தில் அம்மா மேல் கோபம் கோபமாக வரும். அனால் இன்று அந்த வளர்ப்பு பலராலும் பாராட்டப் படுகிறது. அம்மா சிம்ப்ளி கிரேட் .
                 வேலையெல்லாம் முடிந்தது.  கணினியில் பேஸ்புக் பக்கங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் அள்ளி விட்டிருந்தார்கள். அம்மா எப்போம்மா வருவே? மனம் முழு வீச்சில் ஏங்கியது.
                "சங்கீதா. . .  சங்கீதா. . .  " வாசலில் அம்மாவின் குரல் போல் கேட்டது. மனது "இது எப்படி சாத்தியம்?  பிரமையோ"எனக் கூறிக் கொண்டது.   "சங்கீதா. . .  சங்கீதா. . .  " மீண்டும் அதே குரல், ஆனால் கொஞ்சம் ஆண்மை கலந்திருந்தது. சந்தேகத்துடன் வாசல் சென்று கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வந்திருந்ததோ  இரத்தினம் மாமா. சங்கீதாவிற்கு தாய் மாமா. அம்மாவின் அண்ணா.
        அவளுக்கோ மகிழ்ச்சி. போன மாதம் மீளாத் துயரில் எங்களை ஆழ்த்தி விட்டுச் சென்ற அம்மா இன்று எப்படி வர இயலும்? ஆனால் அவள் வந்து விட்டாள், பத்மா அம்மாவாக இல்லை, சங்கீதாவின் அம்மானாக. கடவுள் எவ்வளவு கிரேட். "தாய் மாமன் தாய்க்கு சமம்" - அம்மாவின் ஒலிகள் காதில் ஒலித்தது. "மாமாவைப் பாரு! நானும் தெரிவேன்", என அம்மா பாடுவது போல் இருந்தது. அம்மா(ன்) வந்தாச்சு. அன்னையர் தினம் கொண்டாட. அம்மா(ன்)வை கவனிக்க, விருந்து படைக்க சங்கீதா ரெடியானாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக