செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஏதோ ஒரு பாடல் என் காதில் கேட்கும் அதைக் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.

எவ்வளவு உண்மையான வரிகள்!.
சில பாடல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - இவ்வரிகளைக் கேட்கும் தோறும் ஞாயிறு நாட்களில் எங்கள் சிறு பிராயத்தில் எங்கள் பெற்றோரோடு நேரம் செலவிட்ட நாட்களில் பொழுதுபோக்காக அப்பா தன்னை ஒரு பாடகன் போல அசைவுகள் தந்த வண்ணம் பாடியதுண்டு. இதன் மூலம் அப்பா, "நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது எங்கள் கடமை அதனை பின்பற்றுவது உங்கள் கடமை",  என எங்களுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

தூங்கப் போகையில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் " - பாடியிருக்கிறார்.

பாலும் பழமும் கைகளில் ஏந்தி மெட்டில் வேலும் மயிலும் கைகளில் ஏந்தி என முருகன் பாடலை அம்மா ரொம்ப அழகாக பாடுவார்கள். 

அம்மாவும் அப்பாவும் அப்படி ஒரு understanding . சண்டைகள் பல இருந்திருந்தாலும் பிரிவு அவர்களுக்குள் இல்லவே இல்லை. 

மயக்கமா கலக்கமா பாடலை எத்தனை  தடவை பாடி இருப்போம். 

அப்பாவிற்கு சிவாஜி நடிப்பு மிகப் பிடிக்கும். இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்க்க விரும்புவார். கேட்டால் எம்.ஜி.ஆர். படங்களின் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் சிவாஜி நடிப்பிற்கு முக்கியத்துவம் தந்து எதிர்மறை முடிவுகளோடு படம் முடியும் என்பார்.

முதல் மரியாதை படத்தின் பாடல்கள் எங்களுக்கு குடும்பப் பாடலாகவே மாறிய கதை ஒரு சுவாரசிய நிகழ்வு ஆகும். அந்தப் படம் release ஆன சமயம் தான் என் சின்ன தம்பி பிறந்தான். அவனோ தொட்டிலில் தாலாட்டும் போது நீதானா அந்தக் குயில் எனப் பாடினால் அகா முக மலர்ந்து சிரிப்பான். எப்போது அப்படப் பாடலைக் கேட்கும் போதும் மனம் முழுதும் அப்பாவே நிறைவார்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் வரிகளைக் கூறும் போது அறிவியலை அதிகம் பேசுவார்.

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது எனப் பாடும் தோறும் தன் கனவை வெளிப்படுத்துவார். 

இவற்றையெல்லாம் விடுங்கள். முத்துக்கு முத்தாக என் சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து  வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக பாடலை கேட்டாலே அவருக்கு ஒட்டிக் கொள்ளும் பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் தந்தை மற்றும் சித்தப்பாக்களை நினைந்து பர பரப்பாக பல விஷயங்கள் பேசுவார். குடும்ப உறவுகளில், சொந்த பந்தம் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அதீதம். 

அண்ணாமலை SERIAL  தலைப்புப் பாடல் "உலகம் இருப்பது பாசத்துக்காக " பாடலை குலுங்கி குலுங்கி உருகிக் கேட்பார். 

எப்படியோ அப்பா உருவமாக உலகில் இல்லை என்றாலும் கேட்கின்ற பாடல்களில், படிக்கின்ற விஷயங்களில், பார்க்கின்ற காட்சிகளில்  தத்ரூபமாக வாழ்கிறார். அப்பா இருந்தால் அங்கு அம்மா இல்லாமலா? 

சிங்கம் என்றால்  என் தந்தைதான் - இப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார். நானும் அப்படித்தான் 

FROM  NA. MUTHUKUMAR SIR I DEDICATE THE SONG THEIVANGAL ELLAM THOTRE POGUM SONG TO MY FATHER

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக